மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், அரசு அலுவலர்கள் சார்ந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடுவுக்குள் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்நாள் முதல்வரின் படங்கள் என அனைத்தும் மறைக்கப்பட்டன. இந்தநிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே பொதுமக்களை நேரடியாக சந்தித்து போலீஸ் அதிகாரிகள் குறைதீர் கூட்டம் நடத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர் கூட்டம் 20.3.2024 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா தலைமையில் நடத்தப்பட்டது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப் பெற்ற 7 புகார் மனுக்களின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் 3 பேரிடம் இருந்து வரப்பெற்ற மனுக்களின் பேரிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விளக்கம் கேட்கையில், “நிதி ஒதுக்குதல், அதிகாரத்திற்குட்பட்டு பணி மாறுதல் மற்றும் புதிதாய் நியமனம் செய்தல், புதுத்திட்டம் தொடங்குதல், ஏற்கெனவே உள்ள நலத்திட்டம் சார்ந்த குறைதீர் மனுக்கள் பெறுவதே தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதால் இது சாதாரண நிகழ்வே” என்றனர்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் சிலரிடம் கேட்கையில், “காவல் நிலையங்களில் தினசரி புகார்களாக பெறும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலோ, புகார் தொடர்பான மேல் நடவடிக்கை அல்லது சட்டம்-ஒழுங்கு சம்பந்தமான முக்கிய பிரச்னைகள் குறித்தோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தனிப்பட்ட முறையில் புகார்தாரர்கள் நேரில் சந்திப்பதில் எந்த விதிமீறலும் கிடையாது. ஆனால், மனுநீதி நாள் முகாம், மக்கள் குறைதீர் முகாம் எனும் பெயரில் வாராந்திர சந்திப்பு நடத்துவது தவறான உதாரணமாகிவிடும். இதுதொடர்பாக முன்னரே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும்” என்றனர்.