இந்திரா பிரியதர்ஷினி என்பதுதான் முதலில் அவருக்கு சூட்டப்பட்ட பெயர். பின்னர், பிரியதர்ஷினி என்ற இடத்தில் காந்தி வந்து ஒட்டிக்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் படித்த இந்திரா, இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று சிறைசென்றார்.
முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மொத்தம் 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். இந்திய அரசியல் வரலாற்றில், அவ்வளவு நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு மட்டுமே. நேரு மறைவுக்குப் பிறகுதான், அமைச்சராகவே ஆகிறார் இந்திரா காந்தி. நேருவுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரியும், காங்கிரஸ் கட்சியின் அன்றைய அகில இந்திய தலைவராக இருந்த காமராஜரும்தான், இந்திரா காந்தியை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தவர்கள்.
1964-ம் ஆண்டு பிரதமர் நேரு மரணமடைந்த பிறகு, புதிய பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார் இந்திரா காந்தி. 1966-ம் ஆண்டு உஸ்பொகிஸ்தான் தலைநகரான தாஷ்கண்ட் சென்றிருந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அங்கு திடீரென மரணமடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.
நேரு இறந்தபோது இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தாவே(Gulzarilal Nanda), இந்த முறையும் இடைக்கால பிரதமராக இருந்தார். புதிய பிரதமரைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலை இருந்தது. அப்போது, ‘நானே பிரதமராகத் தொடர்கிறேன்’ என்ற விருப்பத்தை அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜரிடம் தெரிவித்தார் குல்சாரிலால் நந்தா. அவர், இந்திரா காந்தியிடமும் சென்று அவருடைய ஆதரவைக் கோரினார்.
அந்த நேரத்தில், அடுத்த பிரதமராக யாரைத் தேர்வுசெய்வது என்று ஆலோசித்த காங்கிரஸ் தலைவர்கள், மொரார்ஜி தேசாய் மட்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த மொரார்ஜி தேசாய், பிரதமர் பதவிக்கு போட்டியிட ஆயத்தமானார். வேறுவழியில்லாமல், தேர்தல் நடத்தி பிரதமரைத் தேர்வுசெய்வதென்று காமராஜர் முடிவுசெய்தார். அப்போது, சில மாநிலங்களின் முதல்வர்கள், காமராஜரை சந்தித்து, மொரார்ஜி தேசாயைத் தோற்கடிக்க வேண்டுமானால், அவருக்கு எதிராக நீங்கள் போட்டியிட்டால்தான் முடியும் என்றனர். ஆனால், காமராஜருக்கு அதில் விருப்பமில்லை. காமராஜரின் தேர்வு இந்திரா காந்தியாக இருந்தது.
1966-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி, காங்கிரஸ் மக்களவை எம்.பி-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும், மொரார்ஜி தேசாய்க்கு 169 வாக்குகளும் கிடைத்தன. மொத்தம் 14 முதல்வர்களில் 12 முதல்வர்களின் ஆதரவு இந்திரா காந்திக்கு இருந்த காரணத்தால், அவரது வெற்றி எளிதாகியது. வெற்றிபெற்ற இந்திரா காந்தி, உடனடியாக, மொரார்ஜி தேசாயிடம் சென்று ஆசிபெற்றார். பிரதமராகப் பொறுப்பேற்றபோது, இந்திரா காந்திக்கு 49 வயது.
லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, உணவுத்தட்டுப்பாட்டை சமாளிக்க அனைவரும் தினமும் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா பிரதமராக வந்த பிறகும், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக இருந்தது. இந்தியாவில் கடுமையான வறட்சி நிலவியது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்துப்போனதே அதற்கு காரணம். எனவே, வறட்சியும், உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும் பிரதமர் இந்திரா காந்தியின் முன்பாக பெரும் பிரச்னைகளாக இருந்தன.
பொருளாதார ரீதியில் சவால்களையும் நாடு சந்தித்துக்கொண்டிருந்தது. பாகிஸ்தானுடன் போர் நடைபெற்று முடிந்திருந்த நேரம் அது. சீனாவுடனும் பகை நிலவியது. வடகிழக்கில் மிஸோ பழங்குடியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். பசு மாடு இறைச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சாதுக்களும், சன்யாசிகளும் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்போதுதான், உணவுதானியங்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வுகாண சி.சுப்பிரமணியத்தையும், எம்.எஸ்.சுவாமிநாதனையும் களமிறக்கினார் இந்திரா காந்தி. பசுமைப்புரட்சியின் மூலம் உணவுதானியப் பிரச்னைத் தீர்ந்தது.
பிரதமராக வந்த ஓராண்டில், மக்களவைத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தல்களையும் இந்திரா காந்தி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1967-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் எதிர்ப்பு நிலவியது. ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திரா காந்தி பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்தது. அதாவது, மொத்தம் 520 இடங்களில், 283 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்தது.
ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதால், அந்தச் சூழலை பயன்படுத்தி, பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போகிறேன் என்று மீண்டும் களத்தில் இறங்கினார் மொரார்ஜி தேசாய். காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினர். ஆனால், தனக்கு துணை பிரதமர் பதவியையும், உள்துறை அமைச்சர் பொறுப்பையும் தர வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார். கடைசியில், துணை பிரதமர், நிதி அமைச்சர் ஆகிய பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், இந்திராவுக்கும் மொரார்ஜி தேசாய்க்கும் இடையே இணக்கம் இல்லை. ஒரு கட்டத்தில், அவரிடமிருந்து நிதி இலாகாவைப் பறித்தார் இந்திரா. அதன் பிறகுதான், 14 பெரிய வங்கிகளை தேசவுடைமை ஆக்கினார் இந்திரா காந்தி. இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்திரா காந்தி பிரதமராவதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கும் இந்திராவுக்கும் இடையே பல விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவியது. இந்த நிலையில்,1969-ம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தல் வந்தது. அதில், நீலம் சஞ்சீவ ரெட்டியை காங்கிரஸ் நிறுத்தியது. ஆனால், வி.வி.கிரியை குடியரசுத் தலைவராகக் கொண்டுவர இந்திரா முடிவுசெய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தி ஆதரவுபெற்ற வி.வி.கிரியே வெற்றிபெற்றார். அதனால், காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இ.காங்கிரஸ் என்றும் பிரிந்தனர்.
காங்கிரஸின் மக்களவை எம்.பி-க்கள் 282 பேரில், 60 பேர் ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவளித்தனர். அதனால், இந்திரா காந்தி தலைமையிலான அரசு சிறுபான்மையாக மாறியது. மசோதாக்களை நிறைவேற்றக்கூட சிறிய கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருந்தது. எனவே, சிறுபான்மை அரசாக இருப்பதைவிட, மக்களவையைக் கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று இந்திரா முடிவுசெய்தார். அதன்படி, மக்களவை கலைக்கப்பட்டு, 1971-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில், இ.காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றி செல்லாது என்று 1975-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்தார் இந்திரா காந்தி.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்களெல்லாம் சிறையில் தள்ளப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகினர். பத்திரிகை சுதந்திரம் முற்றிலும் நசுக்கப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகு, அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்டு, 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். ஜனதா கூட்டணி 299 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பிரதமராக ஆக வேண்டும் என்ற மொரார்ஜி தேசாயின் கனவு நனவானது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கை ‘ப்ளூ ஸ்டார் ஆபரேஷன்’. பஞ்சாப்பைப் பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு உருவாக்க வேண்டும் என்று இளைஞர்களைத் திரட்டி ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட்டார் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே. காலிஸ்தான் ஆதரவாளர்களால் கலவர பூமியானது பஞ்சாப்.
சீக்கியர்களின் புனித்தலமான பொற்கோவிலுக்குள் ஆயுதங்களுடன் சென்று, அதைத் தங்களின் தலைமையிடம் போல பிந்திரன்வாலே மாற்றினார். அவரது கொட்டத்தை அடக்குவதற்காக பஞ்சாப்புக்கு ராணுவத்தை அனுப்பினார் பிரதமர் இந்திரா காந்தி.
‘ப்ளூஸ்டார் ஆபரேஷன்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது ராணுவம். பீரங்கிகளுடன் பொற்கோவிலுக்குள் புகுந்தது. ராணுவத்தின் தாக்குதலில் பிந்திரன்வாலே உட்பட பலர் கொல்லப்பட்டனர். அரசு தரப்பில் எண்ணிக்கை குறைத்து சொல்லப்பட்டாலும், உண்மையில் பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டும் என்கிறார்கள். பொற்கோவிலின் புனிதத்தை இந்திரா காந்தி களங்கப்படுத்திவிட்டார் என்று சீக்கியர்களில் ஒரு பகுதியினர் இந்திரா காந்தி மீது கடும் கோபடைந்தனர்.
அந்த விவகாரம், பிரதமர் இந்திரா காந்தியின் உயிருக்கே உலைவைத்தது. தனக்கு மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர்களால் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY