சங் பரிவார் அமைப்புகள் வலுவாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டைப் போன்று பா.ஜ.க-வும் அமைப்பு ரீதியான கட்டுப்பாடுகள் ஃபாலோ செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கும். அதனால்தான் உள்ளுக்குள் கோஷ்டி பிரச்னைகள் இருந்தாலும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் கட்டுக்கோப்பை கடைபிடிப்பார்கள்.
இந்த நிலையில் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்த ஜெயசீலனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அல்லது, மாவட்ட தலைவர் தர்மராஜ், வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்ட சீனியர்கள் யாருக்காவது சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென நந்தினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அருமனை மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்த நந்தினி, கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் பீல்டில் இருப்பதாக சீனியர்கள் கொதிக்கிறார்கள். இந்த அதிருப்தி காரணமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டநந்தினியை சந்திக்க கட்சியின் நிர்வாகிகள் செல்லவில்லை என்கிறார்கள். அதே சமயம், “காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் இல்லை என பா.ஜ.க-வுக்கு வந்த விஜயதரணி கூறியிருந்தார். எனவே மகளிரான விஜயதரணி எம்.எல்.ஏ-வாக இருந்த விளவங்கோட்டுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்” என பா.ஜ.க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்ட ஜெயசீலன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவில், “ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கூட இவ்வளவு ஆதரவு இருக்குமோ என்று எண்ணும் அளவிற்கு நேரிலும், தொலைபேசியிலும் என் அன்பு உடன்பிறப்புகள் எனக்கு ஆறுதல் கூறி ஊக்கம் தரும் வார்த்தைகள் பேசியது என் வாழ்நாளில் பெறும் எந்த பதவிக்கும் ஈடாகாது. தலைவர்கள் முன் முகத்தை காட்டுவதை விட எனக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு அவர்கள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது போன்றவற்றில் கலந்து கொள்வதுதான் எனக்கு முக்கியம். அவர்களுக்கு என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. என் சொத்தே நீங்கள்தான். என் உயிர் உள்ளவரை உங்களோடு இருப்பேன்” என தலைவர்களை தாஜா செய்யபோவதில்லை என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்வில் என்ன நடந்தது என்று கட்சி விவரப்புள்ளிகளிடன் விசாரித்தோம். “பா.ஜ.க மாநில அமைப்பு செயலாளர் இருக்கும் கேசவ விநாயகத்தின் சொந்த ஊர் அருமனை. அவரின் சமூகத்தை சேர்ந்தவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக கட்சியில் செல்வாக்காக வளர்ந்து வரும் ஜெயசீலனை மட்டம்தட்ட வேண்டும் என்பதற்காகவும் நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருவேளை பெண் வேட்பாளர் தான் அறிவிக்க வேண்டும் என்றால் கட்சியில் சீனியர்களான விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த, மாநில செயற்குழு உறுபினர் ஸ்ரீ கலா ரமணன், 1996-ல் இருந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் அஜிதா, பிரபு சால பிரசாத் உள்ளிட்ட கட்சி சினியர்களில் ஒருவரு சீட் கொடுத்திருக்கலாம்.
பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை பத்தாயிரம் வீடுகளுக்கு எடுத்துச் சென்று செல்ஃபி எடுத்து அனுப்பியதால் டெல்லியில் அழைத்து பாராட்டப்பட்டவர்தான் பிரபுசால பிரசாத். இவர்களுக்கெல்லாம் கொடுக்காமல் திடீரென வந்தவருக்கு சீட் கொடுத்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குமரி மேற்கு மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனின் வாக்குகளையும் பாதிக்கும்” என்றனர்.
கட்சி சீனியர்களின் அதிருப்தியை நந்தினி சமாளிப்பா என்பது போகப்போகத்தான் தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY