பெங்களூரு: பாஜக சார்பில் ஆறு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகாவின் உத்தர கன்னடா தொகுதி உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை சீட் வழங்கப்படாததற்கு அவரது சர்ச்சைக்குரிய பேச்சே காரணம் என கூறப்படுகிறது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, உத்தர கன்னடா தொகுதியின் வேட்பாளராக அம்மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே காகிரி நிறுத்தப்பட்டுள்ளார். அனந்தகுமார் ஹெக்டேவின் சர்ச்சைக்குரிய பேச்சே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கான காரணம் குறித்த கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த அனந்தகுமார் ஹெக்டே, “காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிராக அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொண்டுவிட்டது. எனவே, அதனை சரிசெய்யும் நோக்கில் அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்ள பாஜக விரும்புகிறது. அதற்காகவே, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கட்சி மறுத்துள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மட்டுமல்லாது, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினரான பிரக்யா தாக்கூர், டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் பிந்தூரி ஆகியோரும் சர்ச்சை பேச்சு காரணமாகவே இம்முறை வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக அரசியலில் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக இம்முறை வாய்ப்பளித்துள்ளது. பெலகவி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.