திமுகவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை: சூரி பேட்டி

காமெடி நடிகராக இருந்து இப்போது கதையின் நாயகனாக வளர்ந்திருப்பவர் சூரி. விடுதலை படம் அவருக்கு புதிய திருப்பத்தை கொடுத்தது. தற்போது அவர் நடித்துள்ள 'கொட்டுக்காளி' படம் விருதுகளை குவித்து வருகிறது. மேலும் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

திமுக அமைச்சரும், நடிகருமான உதயநிதிக்கு சூரி நெருக்கமானவர். சூரிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டுக் கொடுத்தவர் உதயநிதி. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு முன்னணி நடிகரை பிரச்சார களத்தில் திடீரென இறக்குவது திமுகவின் வழக்கம். ஒரு முறை கே.பாக்யராஜையும், இன்னொரு முறை வடிவேலுவையும் இறக்கியது. அதேபோன்று இந்த முறை சூரியை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்காக அவருக்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சூரியிடம் இதுகுறித்து கேட்டபோது “உதயநிதி எனக்கு நெருக்கமான நண்பர். இந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. என்றாலும் நண்பர் என்கிற முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள அமைச்சர் உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உதயநிதி என்னை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும்.

தேர்தல் என்பது மிக முக்கியமானது. இதுவும் ஒரு நல்ல தேர்தலாக இருக்கும் என நம்புகிறேன். முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. அவர்கள் கன்னிச்சாமி போன்றவர்கள். அவர்கள் தங்கள் கன்னி வாக்குகளை செலுத்த தயாராக இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு ஓட்டும், சாதாரண ஓட்டு அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. எனவே அதனை கணித்து முறையாக செலுத்த வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.