ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் நவாஸ்கனி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெயப்பெருமாள், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து முதலாவதாக அதிமுக வேட்பாளருக்கும், அடுத்ததாக சுயேச்சையாகக் களம் காணும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்களை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க கூட்டணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதலாவதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் மற்றும் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகிய 4 பேர் மட்டும் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அலுவலரின் அறைக்குள் நுழைந்தபோதே, பாஜக கூட்டணி வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார வாகனத்தில் ஆட்சியர் வளாகத்தினுள் நுழைந்தார்.
வேனில் இருந்து இறங்கிய பன்னீர்செல்வம் தேர்தல் அலுவலகத்துக்குள் சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்த சூழலில், குறைந்த அளவிலான போலீஸாரால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனிடையே தேர்தல் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்ய சென்ற அ.தி.மு.க வேட்பாளர், சில படிவங்களை எடுத்துச் செல்லாததால் மனுத்தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால் வெளியில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
அவரை தொடர்ந்து தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி மனுதாக்கல் செய்ய வந்தார். அவருடன் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வமும், மனுதாக்கல் செய்ய வெளியில் காத்திருந்த நவாஸ்கனியும் எதிர் எதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் கைகளை குலுக்கியபடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதன் பின் நவாஸ்கனி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்தே முதலாவதாக மனுத்தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாளுக்கு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிமுக-வினர் முதல் ஆளாக வந்தும் மூன்றாவது ஆளாகவே வேட்புமனு தாக்கல் செய்ய நேர்ந்தது, அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.