இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ‘இனிமேல்’ என்ற சுயாதீன பாடல் மூலம்தான் அவர் நடிகராக மாறியிருக்கிறார்.
ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை ஸ்ருதிஹாசனே லோகேஷுடன் இணைந்து இப்பாடலில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன், “முதல்ல இங்கிலீஷ்லதான் இந்தப் பாடலை எழுதினேன். உறவுகள்ல இருக்கிற பிரச்னைகளை பத்திதான் இந்தப் பாட்டுல பேசணும்னு முடிவு பண்ணேன். அதுக்குப் பிறகு அப்பா வந்து பாடல் வரிகளை எழுதினாரு. இந்த மியூசிக் வீடியோல இருக்கிற எமோஷன்களுக்கு லோகேஷ் ரொம்பவே கம்ஃபோர்ட்டாக இருந்து நடிச்சார்.
நான் பிலிம் மியூசிக் மூலமாகதான் பாடகராக அறிமுகமானேன். அதுக்குப் பிறகு என்னை சுயாதீனப் பாடல்கள்தான் ஈர்த்தன. பிலிம் மியூசிக் மிகவும் பெரியது. அந்த அளவிற்கு சுயாதீன பாடல்களைக் கொண்டு போக வேண்டும்ங்கிற முயற்சிதான் இந்தப் பாடல். என்னுடைய அப்பாவும் இந்தப் பாடலுக்கு சினிமா பாடல் மாதிரியான அளவுக்கு வெளியீட்டை எடுத்துட்டு வந்துருக்காரு. ‘விக்ரம்’ படத்தோட சமயத்துல லோகேஷ் கேமரா முன்னாடி நல்லா இருப்பாரு. அதைப் பார்த்துதான் அவர் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், “என்னை இந்தப் பாடலுக்கு நடிக்கக் கூப்பிட்டப்போ எனக்கு சப்ரைஸாகத்தான் இருந்துச்சு. அப்புறம் அவுங்க டீம் வந்து ஐடியா சொன்னாங்க. அதுக்குப் பிறகு இந்தப் பாடலைப் பண்ணலாம்னு தோணுச்சு. நான் கமல் சார் பத்திதான் என்னுடைய கரியர்ல இத்தனை நாள் பேசிருக்கேன். நான் வர்ற ஒரு காட்சில அவரோட குரல் வர்றது கண்டிப்பாகச் சொல்லிக்கிற மாதிரியான விஷயங்கள்ல ஒன்றாக இருக்கும். டைரக்ஷனைவிட நடிப்பு சுலபமாகதான் இருக்கு. எனக்கு நடிக்கணும்னு முழு ஆசை இல்ல. அப்படியான ஆசை எனக்கு இருந்தால் எனக்குப் பிடிச்ச படம் ‘பொல்லாதவன்’. அது மாதிரி ஒரு கதை பண்ணி என் அசிஸ்டென்ட் கிட்ட கொடுத்து நடிப்பேன். ஆனா, அப்படி ஆசை இல்லை.
என்னை இந்தப் பாடலுக்காக நம்புனாங்க. ராஜ்கமல் பிலிமிஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எனக்கு வீடு மாதிரி. அவங்க சொன்னதை நான் மறுக்கமாட்டேன். ‘லியோ’ படத்துக்காக கமல் சாரை ஒரு வசனம் பேசுறதுக்காகக் கூப்பிட்டேன். அவர் எதுவுமே கேட்காம, 24 மணி நேரத்துக்குள்ள வந்து 5 மொழில பேசிக் கொடுத்துட்டு போனாரு. இந்தப் பாடலுக்கான ஷூட்டிங் மூணு நாள்தான் நடந்தது.
இப்போ நான் என் படத்தோட கதை வேலைகள்ல இருக்கேன். ஜூன் மாசத்துல ‘தலைவர் -171’ படத்தோட ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டுல நான் வேலை பார்க்க ஒத்துகிட்டதுக்கு மூணு காரணம் இருக்கு. ஒண்ணு மூணு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிடும். அதுக்கு பிறகு கமல் சார். ஸ்ருதி அப்புறம் அவங்க டீமுக்காக வேலைப் பார்க்க ஒத்துகிட்டேன். இப்போ நிறையா கமிட்மெண்ட் இருக்கு. இப்போ டிஸ்கஷன் முடிச்சிட்டு ரஜினி சார் படம். அந்தப் படம் முடிஞ்சதும் உடனடியாக ஒரு மாசத்துல ‘கைதி -2’ படத்தோட ஷுட்டிங் போகணும்” என முடித்துக் கொண்டார்.