சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் நடாத்துகின்ற சர்வதேச மாநாடு இவ்வாண்டு இலங்கையில்

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு (2024) இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு  அமைவாக இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக  நேற்று (25.03.2024) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

05. சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை 2024 இல் இலங்கையில் நடாத்துதல்

உலகில் மிளகு உற்பத்தி செய்கின்ற பிரதான நாடுகள் இணைந்து 1972 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் கீழ் சர்வதேச மிளகு உற்பத்தி சமுகங்கள் எனும் பெயரில் சர்வதேச அமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் பிரதான நிரந்தர உறுப்பு நாடுகளாக இலங்கை, இந்தியா, இந்தோனிசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் செயற்படுகின்றன. இலங்கை 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகம் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1999, 2006, 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வருடாந்த சர்வதேச மாநாடுகள் எமது நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்கமைய, மிளகு உற்பத்தித் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் பெறுபேறுகளை உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளல். மரபு ரீதியான மற்றும் புதிய சந்தைகளுக்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தகத்தில் இறக்குமதி வரி மற்றும் இறக்குமதி வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்காக ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற விடயங்கள் பற்றிய உடன்பாடுகளை எட்டும் நோக்கில் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு இலங்கையில் நடாத்துவதற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.