ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரன்வீர் என்பவர், தன் மனைவியை சஞ்சீவ் என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் மற்றும் அவரது நண்பர்கள்மீது காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 366 (கடத்தல் அல்லது பெண்ணை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துதல் ) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சஞ்சீவ் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப் பெறக் கோரி ரன்வீர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 482-ன் படி நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சஞ்சீவை சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு, நீதிபதி பிரேந்திர குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சஞ்சீவ் தரப்பில், தான் வேறு சில வழக்குகளில் சிறையில் இருப்பதால், தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என விளக்கமளிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக நீதிமன்றத்தில் ஆஜரான ரன்வீரின் மனைவி, “என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நானாக விரும்பியே சஞ்சீவ் உடன் லிவ்-இன் உறவில் இருந்தேன்” என நீதிமன்றத்தில் கூறினார்.
எவ்வாறாயினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்துக் கொண்டதை தனது மனைவி ஒப்புக்கொண்டதால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494( வாழ்க்கைத் துணை உயிருடன் உள்ள போது, அவரது சம்மதமின்றி இரண்டாவது திருமணம் செய்வது IPC பிரிவு 494 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.) மற்றும் 497 ( சம்மதமின்றி இன்னொருவரின் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்வது ) இன் கீழ் குற்றம் நிரூபணமாகியுள்ளது என்று கணவர் ரன்வீர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால், எஸ்.குஷ்பு Vs கன்னியம்மாள் வழக்கில் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதி பிரேந்திர குமார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497 தனியுரிமைக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததை சுட்டிக்காட்டினார். கணவன் அல்லது மனைவி ஒருவர் உயிருடன் இருக்கும்போது மறுமணம் செய்து கொண்டது வழக்கு அல்ல. லிவ்-இன் போற உறவுகள் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 494 இன் கீழ் வராது என தெளிவுபடுத்தினார். இரண்டு வயது வந்தவர்கள் (Adults) திருமணம் தாண்டி விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டால், அது சட்டபூர்வ குற்றமாகக் கருதப்படாது.
மேலும், மனுதாரரின் மனைவியும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களும் இந்த வழக்கில் கூட்டாகப் பதில் மனு தாக்கல் செய்திருப்பதைக் குறிப்பிட்டு, அவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தொடர்ந்து கூறியதைக் குறிப்பிட்டு, மனுதாரரின் கோரிக்கையை விசாரிப்பதற்கான தகுதி(Merit) ஏதும் இல்லை என குறிப்பிட்டு கணவர் ரன்வீரின் மனுவை தள்ளுபடி செய்தார்.