தேர்தல் திருத்தங்கள் மூலம் எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது..

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஜனநாயக அம்சமாகும். இந்நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, கற்பழிப்பு என்பது பெண்ணின் மீதான அத்துமீறல் மட்டுமே. ஆனால் புதிய திருத்தங்கள் மூலம், பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தைப் நிறைவேற்ற முடியும். இங்கு, சட்டப்பூர்வமாகப் பிரிந்த மனைவிக்கு கணவன் செய்யும் பாலியல் வன்முறை கற்பழிப்பாகக் கருதப்படுகிறது. பொலிஸ் காவலில், சிறை அல்லது வேறு ஒருவரின் காவலில் இருக்கும் போது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களுக்காக வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், இளவயதினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு சுமார் நான்கு ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் பின்னரே முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட மூலத்தை எதிர்த்து சில தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தவிர தேர்தல் திருத்த சட்ட மூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.1994 இல் திருமதி சந்திரிக்கா ஜனாதிபதி வேட்பாளராக மூன்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையை நீக்குவது. ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர்களை தெரிவு செய்யவும் அங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்ட போதிலும், தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தது. அதுவரை, ஜனாதிபதி ஒரு கொலை செய்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடர முடியாமல் இருந்தது. ஆனால் 19 ஆவது திருத்தம் அந்த நிலையை மாற்றியது. அதன்படி இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ஊழலை தடுக்க சட்ட அதிகாரம் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முதல் கீழ்நிலை அதிகாரி வரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது. அந்த ஆணைக்குழு தொடர்பான பல திருத்தங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஊழல் கண்காணிப்பு ஆணைக்குழுவை ஒரு சுதந்திரமான நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதே இதன் நோக்கமாகும்.

1994 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒவ்வொரு தலைவர்களும் இது தொடர்பாக வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அந்த தலைவர்கள் யாரும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த ஆண்டு விகிதாசார தேர்தல் முறை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தேர்தல் முறைகளில், தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொகுதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் செனட் சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.

பாராளுமன்றத் தேர்தலில் திறமையானவர்களைக் காட்டிலும் பிரபலமானவர்கள்தான் அதிகமாக பாராளுமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் செனட் சபை முறையின் ஊடாக பிரபலமில்லாத திறமையானவர்களை பாராளுமன்றத்துக்கு நியமிக்கலாம்.

இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும்” என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.