புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில், அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் மீரட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். பாஜக இந்த தேர்தலுக்கு பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அருண் கோவில் இந்தத் தொகுதியில் வெற்றிக் கனியைப் புசிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
111 பேர் கொண்ட பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத், மேனகா காந்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து புகழ்பெற்ற நடிகர் அருண் கோவில் உத்தர பிரதேசத்தின் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 2004ஆம் ஆண்டு முதல் மீரட் தொகுதியில் மூன்று முறை எம்.பியாக இருந்த ராஜேந்திர அகர்வாலுக்குப் பதிலாக இவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் மீரட் மக்களவைத் தொகுதி இந்திய அரசியலில் புகழ்பெற்ற அதிகார மையமாக இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் 4,729 வாக்குகள் வித்தியாசத்தில் 5,86,184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது இத்தொகுதியில் இறங்கியுள்ளார் நடிகர் அருண் கோவில், அவரைப் பற்றி காண்போம்.
உலக சாதனை படைத்த ராமாயணம் தொடர்: ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம் தொடர், 1987-ம்ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்திலும் நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரை பார்த்தனர்.
அண்மையில், ஊரடங்கு அமலில் இருந்தபோது வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ராமாயணம் தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் 2021 மார்ச்சில் மறு ஒளிபரப்பானது. ராமாயணம் தொடர் முதலில் ஒளிபரப்பானபோது பெற்ற வரவேற்பை போலவே மக்களிடம் வரவேற்பை பெற்றது. கோடிக்கணக்கான மக்கள் இத்தொடரை ரசித்தனர். உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ராமாயணம் தொடர் படைத்தது குறிப்பிடத்தக்கது.
1990-களில் ராமயண தொடர் பிரபலமாக இருந்தபோது சீதையாக நடித்த தீபிகா பாஜகவில் இணைந்து அக்கட்சியின் எம்.பி.யாக இருந்தார். அதேசமயம் ராமராக நடித்த அருண் கோவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1990-களில் நடந்த தேர்தலில் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் பெரிய அளவில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதையடுத்து அவர் பாஜக-வில் இணைந்தது நினைவுகூரத்தக்கது.
யார் இந்த அருண் கோவில்? – மீரட்டைச் சேர்ந்த கோவிலின் முதல் படமான பஹேலி 1977-இல் வெளியானது. 1980-களின் பிற்பகுதியில் பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்து பிரபலமானார். பின்னர் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். மேலும் பல ஒடியா, தெலுங்கு, போஜ்புரி மற்றும் பிரஜ் பாஷா படங்களில் பணியாற்றியிருக்கிறார். இதையடுத்து அவர், 2001-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
ஜனவரி மாதம் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களில் கோவிலும் ஒருவர். தேர்தல் களம் குறித்து அருண்கோவில், மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்வுக் குழுவுக்கு தனது சமூக ஊடக தளங்களில் நன்றி தெரிவித்திருக்கிறார். யாமி கெளதம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆர்ட்டிகல் 370’ படத்தில் பிரதமர் மோடியின் பாத்திரத்தில் கோவில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மகாபாரதத்தில் கிருஷ்ணரை சித்தரித்ததற்காக அறியப்பட்ட நிதிஷ் பரத்வாஜ், ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இது திரையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அருண் கோவிலின் புகழ் தேர்தல் களத்துக்கு எவ்வாறு பயன்படும் என்பதை களம்தான் தீர்மானிக்கும்.
முந்தைய பகுதி: சர்ச்சை கருத்துகள் டு பாஜக வேட்பாளர்… – யார் இந்த கங்கனா ரணாவத்? | 2024 தேர்தல் கள புதுமுகம்