நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), ஹாட்ரிக் வெற்றிக்குக் காத்திருக்கிறது. ஆனால், “இந்த முறை NDA-வின் வெற்றிக்கு எங்களுடைய கூட்டணி முட்டுக்கட்டையாக இருக்கும்” என்கிறது, ஏராளமான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியா கூட்டணி (I.N.D.I.A). கூட்டணிகளிடையே தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. அதேபோல இந்திய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக இருக்கிறது. இருப்பினும், இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட 15 மாநிலங்களின் தேர்தல் முடிவே மத்தியில் யாருடைய ஆட்சி என்பதைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம்.
அந்த மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையானது, தேர்தல் முடிவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 15 மாநிலங்கள் குறித்தும், அவற்றில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவிகிதம் குறித்தும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்!
பாஜக NDA கூட்டணிக்குத் தலைமை வகித்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 18 ஜூலை 2023 அன்றுதான் I.N.D.I.A எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, கடந்த தேர்தலில் UPA என்ற பெயரில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தல் களம்கண்டது.
இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிற மாநிலம், மொத்தம் 80 தொகுதிகள். மிகவும் கவனிக்கக்கூடிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருந்துவருகிறது. கடந்த 2019-ம் தேர்தலின்போது NDA கூட்டணில் இடம்பெற்ற பா.ஜ.க, 49.5 சதவிகித வாக்குகளைப் பெற்று, 62 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல NDA கூட்டணியில் இடம்பெற்ற அப்னா தள் (சோனேலால்) கட்சி, 1.20 சதவிகித வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வென்றது.
அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, 17.96 சதவிகித வாக்குகளுடன் 5 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வென்று, 19.23 சதவிகித வாக்குகளை அறுவடை செய்தது.
2019 தேர்தலில் மாநிலத்தில் 67 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 6.3 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வென்றது.
NDA கூட்டணி:- மகாராஷ்டிரா மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 48. கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய ஆட்சி மாற்றங்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்தின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பார்ப்போம். NDA கூட்டணியில் பா.ஜ.க, 27.59 சதவிகித வாக்குகளைப் பெற்று, 23 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா கட்சி, 23.29 சதவிகித வாக்குகளுடன் 18 இடங்களில் வெற்றிபெற்றது.
UPA கூட்டணி:- UPA கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 15.52 சதவிகித வாக்குகள் பெற்று, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 16.27 சதவிகித வாக்குகள் பெற்று, 1 இடத்தில் வெற்றிபெற்றது.
இந்த முறை நடைபெறும் தேர்தலைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா இரண்டாகப் பிரிந்த பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தலாகும். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா NDA கூட்டணியிலும்… உத்தவ் தாக்கரேயின் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி I.N.D.I.A கூட்டணியிலும் இருப்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. கடந்த தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 43.28 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 5.61சதவிகித வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 6.28 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.40 வாக்கு சதவீதங்கள் பெற்று ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த நான்கு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை இந்த நான்கு கட்சிகளும் I.N.D.I.A கூட்டணியில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (இருப்பினும் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என மம்தா அறிவித்திருக்கிறார்)
NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, கடந்த தேர்தலில் 40.25 சதவிகித வாக்குகள் பெற்று, 18 இடங்களில் வெற்றிபெற்றது.
மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 23.58 சதவிகித வாக்குகளைப் பெற்று 17 இடங்களில் வென்றிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) 21.81% சதவிகித வாக்குகளைப் பெற்று 16 இடங்களில் வென்றிருக்கிறது.
UPA கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் 7.70 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வென்றிருக்கிறது. ராஷ்டிரீய ஜனதா தளம் 15.36 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை. திடீர் திருப்பங்கள் நடைபெறும் பீகார் அரசியலில் இந்த முறையும் திடீர் திருப்பம் எதுவும் வருமா?என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மொத்தம் 39 தொகுதிகள் இருக்கின்றன. வழக்கமாக இரு முனை போட்டியாகவே இருக்கும். அதாவது திமுக Vs அதிமுக என்றுதான் இருந்திருக்கிறது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல UPA கூட்டணியில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் திமுக 32.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 23 (20 திமுக + 1 + 1 + 1) இடங்களில் வென்றிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 12.76 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 இடங்களில் வென்றிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.44 சதவிகித வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வென்றிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2.40 சதவிகித வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வென்றிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.18 சதவிகித வாக்குகள் பெற்று, 1 இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வென்றிருக்கிறது.
NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 3.66 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஓரிடத்தில்கூட வெல்லவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி 5.42 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில்கூட வெல்லவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 0.52 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்திலும் வெல்லவில்லை.
இந்த முறை அதிமுக NDA கூட்டணியில் இல்லாத காரணத்தால், அது பாஜக-வுக்கு பலமாக இருக்குமா அல்லது பலவீனமாக இருக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மொத்தமாக 29 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த தேர்தலின்போது பாஜக 58 சதவிகித வாக்குகளைப் பெற்று, 28 இடங்களில் வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34.50 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தென் இந்திய அரசியல் களத்தில் சற்று மாறுபட்டுக் காணப்படும் மாநிலமாகும். கடந்த முறை தேர்தலின்போது NDA கூட்டணியில் பாஜக 51.38 சதவிகித வாக்குகள் பெற்று, 25 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் உடன் கூட்டணியிலிருந்த ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சி 9.67 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சி NDA கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 31.88 சதவிகித வாக்குகளைப் பெற்று, 1 இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. சென்ற முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, அனைத்து தொகுதிகளிலும் வென்று, 62.21 சதவிகித வாக்குகளை அறுவடை செய்தது. 26 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, எங்கும் வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம், 32.11.
மொத்தம் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் NDA கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, 58.47 சதவிகித வாக்குகளைப் பெற்று, 24 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை NDA கூட்டணியிலிருந்த ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி 2.03 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வென்றிருக்கிறது. தற்போது ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34.24 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில்கூட வெல்லவில்லை.
மொத்தமாக 25 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது, ஆந்திரா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 39.59 சதவிகித வாக்குகள் பெற்று 3 இடங்களில் வென்றிருக்கிறது. பவன் கல்யானின் ஜன சேனா கட்சி 5.79 சதவிகித வாக்குகள் பெற்று, ஓர் இடத்தில்கூட வெல்லவில்லை. பாஜக 0.96 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
மேல் குறிப்பிட்டிருக்கும் 3 கட்சிகளும் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தனியே போட்டியிட்ட நிலையில், இந்த 3 கட்சிகளும் தற்போது NDA கூட்டணியில் ஒன்றாகக் களம் காண இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த முறை, 1.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, எங்கும் வெற்றிபெறவில்லை.
ஒடிசாவில் மொத்தம் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த முறை பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அதில் பாஜக 38.37 சதவிகித வாக்குகளுடன், 8 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 13.81 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.25 சதவிகித வாக்குகள் பெற்று, எங்கும் வெற்றிபெறவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 0.10 சதவிகித வாக்குகள் பெற்று, எங்கும் வெற்றிபெறவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 0.57% சதவிகித வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வென்று, 42.76 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
ஒடிசாவின் முக்கிய கட்சியான பிஜு ஜனதா தளம் தன்னுடைய கூட்டணியை இதுவரையிலும் தெரிவிக்கவிக்கவில்லை. அப்படி எந்த பக்கம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கூட்டணிக்குச் செல்கிறதோ, அந்த அணி ஒடிசாவில் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் மொத்தமாக 20 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த முறை UDF, NDA, LDF ஆகிய மூன்று கூட்டணிகளில் அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. UDF கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. NDA கூட்டணியில் பாஜக, பாரத தர்ம ஜன சேனா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. LDF கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி 25.83 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வென்றது. காங்கிரஸ் 37.27 சதவிகித வாக்குகளுடன் 15 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5.45 சதவிகித வாக்குகளுடன் 2 இடங்களில் வெற்றி பெற்றது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 2.45 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வெற்றி பெற்றது. கேரள காங்கிரஸ் (எம்) 2.07 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வென்றிருக்கிறது.
அதேபோல பாஜக 12.93 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. பாரத தர்ம ஜன சேனா கட்சி 1.87 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
மொத்தம் 17 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தெலங்கானா ராஷ்டிர சமிதியாக இருந்த தற்போதைய பாரத ராஷ்டிர சமிதி கட்சி 41.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, 9 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 29.48 சதவிகித வாக்குகளைப் பெற்று 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜக 19.45 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் வெற்றிகொண்டது. அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஓரிடத்தில் வென்று, 2.78 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
மொத்தமாக 14 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. NDA கூட்டணியில் பாஜக, AGP – அசோம் கண பரிஷத், BPF – போடோலாண்ட் பீப்புள் ஃப்ரன்ட் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதில் பாஜக 36.05 சதவிகித வாக்குகள் பெற்று 9 இடங்களில் வென்றிருக்கிறது. அசோம் கண பரிஷத் கட்சி 8.23 சதவிகித வாக்குகளைப் பெற்று, எங்கும் வெற்றிகாணவில்லை. காங்கிரஸ் கட்சி 35.44 சதவிகித வாக்குகளைப் பெற்று, 3 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.
மொத்தம் 14 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. NDA, UPA ஆகிய இரு கூட்டணிகளில், மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் களம்கண்டன. NDA கூட்டணியில் பாஜக, AJSU – அணைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. UPA கூட்டணியில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் JVM – ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.
இதில், பாஜக 50.96 சதவிகித வாக்குகளைப் பெற்று 11 இடங்களில் வெற்றிபெற்றது. AJSU கட்சி 4.33 சதவிகித வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் வென்றது. காங்கிரஸ் கட்சி 15.63 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வெற்றிபெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 11.51 சதவிகித வாக்குகளுடன் 1 இடத்தில் வென்றது.
அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருக்கக்கூடிய 15 மாநிலங்களின் `2019 நாடாளுமன்றத் தேர்தல்’ முடிவுகளை, தரவுகளுடன் பார்த்தோம். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் மேற்குறிப்பிட்டிருக்கும் 15 மாநிலங்களில் மட்டும் 468 தொகுதிகள் இருக்கின்றன. எனவே, இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவு, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சென்ற பொதுத் தேர்தலில் இந்த 15 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 255. காங்கிரஸ் கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை 38. இந்த முறை தேர்தல் களம் எப்படி இருக்கப் போகிறது, ஆட்சி அரியணை யாருக்குக் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY