ஐதராபாத்,
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அகர்வால் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹெட்டுடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய ஹெட் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ஹெட் 24 பந்தில் 62 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அபிஷேக் சர்மாவுடன் எய்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க்ரம் உடன் கிளாசென் ஜோடி சேர்ந்தார். இருவரும் மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இதில் அதிரடியாக ஆடிய கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், ஹெட் 62 ரன் எடுத்தனர். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.