புதுடெல்லி: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் நிறைய முன்னேற்றங்களைப் பார்க்க முடிவதாக அம்மாநில சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா-வின் 55வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் சதி குறித்து அம்பலப்படுத்தும் வகையில் பேசிய தஸ்லீமா அக்தர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது: “பாகிஸ்தானால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஐ.நா.வில் நான் பேசினேன். அதோடு, ஜம்மு காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அதனை ஒட்டுமொத்த உலகமும் கவனித்தது.
பாகிஸ்தானின் ஏஜென்டுகள் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை ஐநா அவையில் வழங்கி வருவதை நான் அம்பலப்படுத்தினேன். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் குடிபெயர்ந்துள்ள, அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ள சிலர், ஜம்மு காஷ்மீரில் வசிப்பதைப் போன்று போலியான முகமூடி அணிந்து கொண்டு அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தனர். வெளிநாடுகளில் குடியேறிவிட்ட அவர்கள் எவ்வாறு காஷ்மீரின் நிலை குறித்து பேச முடியும்?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தான் நிதி உதவியோடு நடத்தப்பட்டு வந்த கல் எறியும் சம்பவங்கள் தற்போது நின்றுவிட்டன. பாகிஸ்தானின் நிதி உதவியோடு இயங்கி வந்த அமைப்புகளால் நடத்தப்பட்ட கலவரங்கள், வன்முறைகள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரப்பு காஷ்மீரின் நிலைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள் என பல்வேறு கட்டமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் தங்கள் சொந்த நிதியைக் கொண்டு சாலைகளை அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
சுற்றுலாவின் மையமாக காஷ்மீர் திகழ்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களை காஷ்மீர் ஈர்க்கிறது. காஷ்மீர் பெண்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இளைஞர்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டிருக்கிறத” என்று அவர் தெரிவித்துள்ளார்.