மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய விதிமுறைகள் 29 (a)-ன் படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 6 ஆண்டுகளாக ஒரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டால், அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
மதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு குடை சின்னத்தை ஒதுக்கியிருந்தது. அதன்பிறகு, 1998-ம் ஆண்டு தேர்தலின்போதுதான், மதிமுகவுக்கு முதன்முறையாக பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 1998 முதல் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை மதிமுக பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தது. அக்கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் பங்கேற்கவில்லை.
2016-ல் மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் தேர்தலைச் சந்தித்தபோது அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. கடந்த 2019 ஜூலையில் நடந்த ராஜ்யசபாவுக்கான தேர்தலில், வைகோ மதிமுக சார்பில் தான் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் காரணமாகவும், தங்களது பதிவை மீளமைக்கவும் மதிமுக இம்முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது.
அதன்படி, இம்முறை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வழக்கும் தொடரப்பட்டது.
மேலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோ “செத்தாலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார். ஒருவேளை இந்த தேர்தலில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், அது திமுகவின் வெற்றியாகவே கருதப்படும். எனவே தான், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க இன்று காலை வரை தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கை முடித்துவைத்துள்ளது.
தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்ட நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “பம்பரம் சின்னம் கிடைக்காத பட்சத்தில், இரண்டு சின்னங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
அவர் கடந்த 25-ம் தேதி தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில், பம்பரம் இல்லாத பட்சத்தில், தங்களுக்கு தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே, இந்த இரண்டு சின்னங்களில் ஒன்றில்தான் மதிமுக இம்முறை போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மதிமுகவின் பொருளாளரும், திருச்சி மக்களவைத் தேர்தலின் மாற்று வேட்பாளருமான செந்திலதிபன் கூறும்போது “பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற புதியக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தமாகா 12 ஆண்டுகளுக்கு முன் இழந்த உரிமையான சைக்கிள் சின்னத்தை வழங்குகிறது. அக்கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. ஆனால், மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. பம்பரம் கிடைக்காத பட்சத்தில் மாற்று சின்னத்தில் போட்டியிட வேண்டும். இதுகுறித்து கட்சித் தலைமை முடிவெடுத்து தெரிவிக்கும்” என்றார்.