‘லொள்ளு சபா’ சேஷூவின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே காமெடி நடிகர்களின் இழப்பு ஒரு மீளாத் துயரத்தைக் கொடுக்கும். ‘லொள்ளு சபா’ மூலமாகவும் பல படங்களின் வாயிலாகவும் நம்மைச் சிரிக்க வைத்த சேஷூவின் மரணமும் நமக்கு அப்படி ஒரு துயரத்தைத்தான் கொடுத்திருக்கிறது. சேஷூ என்றதும் நமக்கு ஞாபகம் வரும் பல காமெடிகளில், ‘A1’ பட காமெடிகளும் அடக்கும். அதிலும் சேஷூ சொல்லும், ‘நான் யாருன்னு என்ன கேக்குறத விட, வேற யார்கிட்டயாவது போய் அவர் யாருன்னு கேட்டு பாரு… அச்சச்சோ அவரா, பயங்கரமான ஆளாச்சே, அப்டின்னு சொல்லுவா’ என்கிற வசனம் ரொம்பவே ஃபேமஸ்.
சேஷூக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த `A1′ படத்தின் இயக்குநர் ஜான்சன், சேஷூவின் நினைவுகளைப் பகிர்ந்தார்.
“‘A1’ படத்தில் சேஷூ நடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நடிகராக மட்டும்தான் எனக்கு அவரை தெரியும். இந்தப் படத்தில் சென்னைத் தமிழ் பேசுகிற ஒரு ஐயர் கேரக்டரில் நடிக்கிறதுக்கு ஒரு நடிகரைத் தேடிட்டு இருந்தேன். எனக்கு சேஷூனு சொன்னதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது சென்னை பாஷைதான். அதுனால, நானும் உடனே ஓகே சொல்லிட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் சில நாள்கள் எங்களுக்குள்ள பெருசா எந்தப் பேச்சும் இல்ல. ஆனால், ஷூட்டிங் போக, போக நாங்க ரொம்பவே நெருக்கமாகிட்டோம். ஜாலியாக இருந்தால் சேஷூ மாமான்னு கூப்பிடுவேன்; எதாச்சும் கோவமாக இருந்தால் பேர் சொல்லிக் கூப்பிடுவேன். என் கோவத்தைக் குறைக்கிறதுக்காக என் முன்னாடி வந்து விதவிதமா எக்ஸ்பிரஷன் செஞ்சு காட்டுவார். அதிலேயே நான் சமாதானம் ஆகிடுவேன்.
ஒரு குழந்தை மாதிரி ஷூட்டிங்கில் துருதுருன்னு இருப்பார். அவரோட உடல்மொழியை வச்சு அவர் வயசை நாம கண்டுபிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு ரொம்ப எனர்ஜியாக இருப்பார். ‘A1’ படத்தில் ஹீரோயின் கேரக்டர் பிராமணர் வீட்டுப் பொண்ணு. ஹீரோயின் அப்பா இறந்த மாதிரி சீன்ஸ் எடுக்கும் போது, சேஷூ மாமாதான் பிராமணர்கள் வீட்டில் இந்த மாதிரி துக்கம் நடந்தா என்னென்ன பண்ணுவாங்க… அந்த உடலை எப்படிப் படுக்க வைப்பாங்க… அந்த உடலுக்கு என்னென்ன சடங்குகள் பண்ணுவாங்கனு என்னிடம் பல விஷயங்களைச் சொன்னார். அதில் சில விஷயங்களைத்தான் அந்தப் படத்தில் நான் வச்சேன். இன்னைக்குக் காலையில் சேஷூ மாமாவுக்கு அதே மாதிரி சடங்குகள் பண்ணுவதைப் பார்த்தப்போ, என்னால அங்க நிக்க முடியலை.
‘A1’ படத்தில் அவர் நடிக்க ஆரம்பிச்சு சில நாள்களில் அவருக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. கையிலும் முகத்திலும் அடி. முகத்துக்கு மேக்கப் போட்டு சமாளிச்சாச்சு. ஆனால், கையை தொங்கப்போட்டால் அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அதுனால, அதுக்கப்பறம் அவர் நடிச்ச காட்சிகளில் கையை மடக்கித்தான் வச்சிருப்பார். அந்த கட்டு தெரியக்கூடாதுனு அதுக்கு மேல துண்டைப் போட்டு மறைச்சிருப்பார். இப்போ போய் அந்த காட்சிகளைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்ச அந்த கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சு. அவர் பேசிய பல வசனங்கள் மீம்ஸா வந்துச்சு. அதெல்லாம் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
ரெண்டாவதாக நான் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட வேலைகளை ஆரம்பிச்சப்போ, ‘A1’ படத்தில் நடிச்ச பல நடிகர்கள் எனக்கு போன் பண்ணி வாய்ப்புகள் கேட்டுட்டு இருந்தாங்க. சேஷூ மாமா போன் பண்ணவே இல்லையேன்னு நானே அவருக்கு போன் பண்ணி, ‘என்ன மாமா, என் படத்தில் நடிக்கணும்னு உனக்கு ஆசை இல்லையா. போன் பண்ணவே இல்லையே’னு கேட்டேன். ‘நான் இல்லாம நீ படம் எடுத்திருவியா. முதலில் நீ போனை வை’னு போனை கட் பண்ணிட்டு உடனே என்னைப் பார்க்க வந்துட்டார். ‘A1’ படத்தில் வர மாதிரியே ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்திலும் அவருக்கு ஐயர் வேஷம் கொடுத்தேன். அதில் ஒரு காட்சியில் அவர் மந்திரம் சொல்ற மாதிரி வரும். ‘யோவ் மாமா… உனக்குத் தெரிஞ்ச மந்திரத்தை சொல்லு’னு சொன்னேன். அவருக்கு எதுவுமே தெரியலை. அப்பறம் அவரோட மாமா ஒருத்தருக்கு போன் பண்ணி மந்திரம் கேட்டார். அதையே நான் அந்த சீனுக்குள்ள வச்சிட்டேன். அந்த காமெடியும் ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆச்சு. இப்போ நான் யோகி பாபுவை வெச்சி இயக்கியிருக்கிற ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்திலேயும் சேஷூ மாமா ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டரில் நடிச்சிருக்கார்.
சேஷூ மாமான்னு சொன்னா சிரிப்புதான். அவரோடு பேசிட்டிருந்தாலும் சரி, அவர் பேசும் போது பக்கத்துல இருந்தாலும் சரி, நாம சிரிச்சிட்டே இருக்கலாம். அதே மாதிரி கஷ்டப்படுறவங்களுக்குக் கொடுத்தே பழகியவர். கஷ்டப்படுறவங்களுக்குக் கொடுக்க 25 கிலோ அரிசி தேவைப்பட்டால், ஒரு ஆள்கிட்ட ஒரு கிலோ அரிசின்னு தெரிஞ்சவங்க கிட்ட வாங்கி அங்க கொடுப்பார். கொரோனா சமயத்தில் அவரோட ஸ்கூட்டியில ஸ்பீக்கரைக் கட்டிக்கிட்டு, ‘மாஸ்க் போட்டு வெளியில போங்க; சமூக இடைவெளியை கடைப்பிடிங்க’னு ஊர் முழுக்கச் சொல்லிட்டு இருந்தார்.
இப்படி எல்லாருக்கும் ஒரு பிரச்னைன்னா ஓடிப்போய் பார்த்தவருக்கு, ஒரு பிரச்னை வந்தப்போ அவருக்குத் தேவையான உதவி கிடைக்கலையேனு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. 10 லட்ச ரூபாய் இல்லாமல் சேஷூ மாமா உயிர் போயிடுச்சுனு நினைக்கும் போது வேதனையாக இருக்கு. அவருக்குப் பழக்கமான பெரிய, பெரிய நடிகர்கள் உதவியிருந்தால், அவரோட உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். நடிகர் சங்கமும் இந்த மாதிரி ஒரு நடிகர் பண உதவி இல்லாமல் இருக்கார்னு தெரிஞ்சு அவருக்கு உதவி செய்திருந்தாலும் இன்னைக்கு அவரை காப்பாற்றி இருக்கலாம். சேஷூ மாமாவோட இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும்” என்றார் இயக்குநர் ஜான்சன்.