தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்

பாங்காக்:

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது.

ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருமண பந்தம் தொடர்பாக ஷரத்துகளில் “ஆண்கள் மற்றும் பெண்கள்” மற்றும் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளை “தனிநபர்கள்” மற்றும் “வாழ்க்கை துணைவர்கள்” என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

எல்.ஜி.பி.டி.க்யூ+ தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.

நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இனி செனட் சபைக்கு அனுப்பப்படும். பெரும்பாலும் கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த சட்ட மசோதாவும் செனட் சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மன்னர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தென்கிழக்கு ஆசியாவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக தாய்லாந்து மாறும். ஆசிய அளவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக தாய்லாந்து இணையும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.