அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏப்.1-ம் தேதி முதல் நவீன ஸ்மார்ட் போர்டு: தொடக்க கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் கற்பித்தலுக்கான அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி வழங்கி, அதற்கான அறிக்கையை இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை முறையாக பெற்று, வகுப்பறையில் நிறுவும் பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுத்தல்கள் வழங்க வேண்டும்.

இணையதள இணைப்பு: அதேபோல, நடுநிலைப் பள்ளிகளுக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கான கணினிகள், இதர சாதனங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். ஸ்மார்ட் போர்டுகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் சிறந்த முறையில் இயங்க இணையதள வசதிகள் அவசியம்.

அதனால், இணையதள இணைப்புக்கான நிதியும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. அதை முறையாக பயன்படுத்தி, தலைமை ஆசிரியர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் இணையதள வசதிகளை பெற்றுவிட வேண்டும். அதற்கான ஆவணங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏப்ரல், மே மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, வரும் கல்வி ஆண்டில் ஸ்மார்ட் போர்டுகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த பணிகளில் சுணக்கம் காட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.