‛அழகி' இப்போதும் பேசப்படுவது ஏன்…? – பார்த்திபன் விளக்கம்
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று வெளியான படம் 'அழகி'. 22 ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடிப்பில் வெளியானது. இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்வில் தயாரிப்பாளர் உதயகுமார், தேவயானி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பார்த்திபன் பேசியதாவது : தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார் சார் என்று என்னிடமே கேட்பார்.
நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பேர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் 'அழகி' தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுதான் இந்த படத்தின் ரீ-ரிலீஸ்.
காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால்தான் இந்த அழகியும் தோற்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம் எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன் என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து படத்தில் நடிக்க உதவியதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தை பார்த்த பலரும் இதில் பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன்தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்து தான் தற்போது 13 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் 'டீன்ஸ்' என்கிற ஒரு அட்வென்சர் த்ரில்லர் படத்தை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் இது வெளியாகிறது.
அழகி படத்தை தேவயானி ஒரு மேஜிக் என்றார். அதையே தான் தமிழில் கண் கட்டு வித்தை என்று சொல்வேன். சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார். ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும்.
இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார். அதுதான் இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி -2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை. நந்திதாதாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு பார்த்திபன் பேசினார்.