பெங்களூரு: விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக குறிவைப்பதாக கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; சட்டம் இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கு பாஜக அரசின் உத்தரவே காரணம்.
காங்கிரஸ் கட்சியைக் கண்டும், இண்டியா கூட்டணியைக் கண்டும் அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி பாஜக கூட்டணியை தோற்கடிக்கப் போகிறது. இதை பாஜக புரிந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும், அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்கிறார்கள்.
வருமான வரித் துறை எனக்கும் நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கெனவே, முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை நோட்டீஸ் பின்னணி: கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி கணக்கை காங்கிரஸ் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2018-19 நிதி ஆண்டுக்கான வரிக் கணக்கை காங்கிரஸ் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி கடந்த பிப்ரவரியில் அக்கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸ் கட்சியின் முறையீட்டை தொடர்ந்து, முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக செயல்பட வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
காங்கிரஸ் கட்சியின் வருமானத்தில் ரூ.520 கோடிக்கு கணக்கு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த வருமான வரித் துறை, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வருமான வரி விவரங்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், கடந்த 22-ம் தேதி காங்கிரஸின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 2017-18 முதல் 2020-21 வரையிலான 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸின் வரி விவரங்களை மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது. இதை எதிர்த்து காங்கிரஸ் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 28-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திரகுமார் கவுரவ் அமர்வு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்தது.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அக்கட்சிகளை நிதி ரீதியாக முடக்குவதே பாஜகவின் உத்தி. காங்கிரஸை முடக்க வரி பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக” என்று குற்றம்சாட்டினார். இது குறித்து வரும் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் பொருளாளர் அஜெய் மக்கான் தெரிவித்தார்.