காசா: அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேல் காசா போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் தங்களது சொந்த நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ரமலான் பண்டிகையை முன்னிட்டு காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இதற்கு முன்னரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா பகுதியில் வாழும் மக்கள் பஞ்சத்தில் தவிக்கின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக பல நாடுகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.
அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல ஆண்டுகளாக ராணுவ உதவிகளை செய்து வருகிறது இருப்பினும் போர் சமயத்தில் அந்த உதவிகளைத் தொடர பல எதிர்ப்புகள் வந்த வண்னம் இருக்கிறது. குறிப்பாக, அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும், சில முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் அமெரிக்கா பல கோடி மதிப்பிலான 2000 வெடிகுண்டுகள், 25 ஜெட் விமானங்கள் உள்ளிட்டவைகளை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் வாஷிங்டனுக்கு பயணம் செய்திருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகையும், வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது.