சென்னை: காசிமேடு மீன் சந்தைக்கு வியாபாரம் செய்ய வரும் மீன் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யக் கூடாது என மீனவர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில், அதன் தேசிய அமைப்பு செயலாளர் நாஞ்சில் ஜி.ஆர்.சேவியர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
காசிமேடு மொத்த மீன் சந்தைக்கு வெளியூர்மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மீன் கொள்முதல் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர். சில்லறை, மொத்த வியாபாரிகள் என பலதரப்பட்ட வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தினசரி வர்த்தகத்துக்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பணம் கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது.
தற்போது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தினமும் சோதனை அடிப்படையில் மீன் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்காக காசிமேடு மொத்த சந்தைக்கு பணம்கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கின்றனர்.
இதனால், காசிமேடு மொத்த சந்தையில் மீன் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீன் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். மீன் வியாபாரத்தை பொருத்தவரை சரியான நேரத்தில் சந்தைக்குச் சென்றால்தான் நல்ல தரமான மீன்களை வாங்க முடியும்.
எனவே, மீனவ மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், மீன்பிடி தொழிலாளர்களுக்கும் எவ்வித வாழ்வாதார இடையூறும் இல்லாமல் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு சிறப்பாக மீன்பிடித்தொழில் செய்திட வழி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.