புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் 6 நாள் அமலாக்கத் துறை காவலுக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1-ம் தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் டெல்லி கல்விஅமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையில் கேஜ்ரிவால்தனது மொபைல் பாஸ்வேர்டை தர மறுப்பதால் அவரை மேலும் சில நாட்களுக்கு விசாரிக்க வேண்டியுள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகிறார்.
கடந்த 2021-ல் மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது கேஜ்ரிவால் பயன்படுத்திய செல்போனை இப்போது காணவில்லை என்று இதே அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்புகூறியுள்ளது. அப்படி இருக்கையில் கேஜ்ரிவாலின் சமீபத்திய போனை அமலாக்கத் துறை ஏன் கேட்கிறது? மக்களவைத் தேர்தல் உத்திகள், இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நடந்த உரையாடல் மற்றும் ஒட்டுமொத்த பிரச்சார திட்டம் பற்றி அறியவே அவர்கள் கேஜ்ரிவால் போனை கேட்கின்றனர். இவ்வாறு அமைச்சர் ஆதிஷி கூறினார்.