மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தனைக்கும், மார்ச் 19-ம் தேதி சேலம் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ளும் அதே நாள்தான் பா.ஜ.க – பா.ம.க கூட்டணியே உறுதியானது. பின்னர் சேலம், மாநாட்டில் தந்தையும், மகனுமான ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொள்ள, `குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என அந்த மேடையிலேயே தி.மு.க-வை சாடினார் பிரதமர் மோடி.
அதற்கடுத்த சில நாள்களில், தாங்கள் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களை பா.ம.க அறிவித்தது. அதில், தருமபுரி தொகுதிக்கு பா.ம.க சார்பில் அரசாங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணிநேரங்களிலேயே, தருமபுரி வேட்பாளரை மாற்றிவிட்டு, அன்புமணியின் மனைவி சௌமியாவை வேட்பாளராக அறிவித்தது பா.ம.க.
இதனால், ராமதாஸ் குடும்பத்தில் மகனைத்தொடர்ந்து மருமகளாகிய சௌமியா தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பது குடும்ப அரசியலாகாதா எனக் கேள்விகள் எழ, `அவருக்குத் தகுதி இருக்கிறது. அவர் போட்டியிடுவது குடும்ப அரசியலாகாது’ எனத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார். அதைத்தொடர்ந்து, அண்ணாமலையின் கருத்து குறித்து விகடன் வலைதளப்பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `சௌமியா அன்புமணி களத்தில் பணியாற்றியிருக்கிறார். எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவது குடும்ப அரசியலாகாது என்ற அண்ணாமலையின் கருத்து?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சரி, சந்தர்ப்பவாதம், தவறு’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக 71 சதவிகிதம் பேர் அண்ணாமலையின் கருத்தை சந்தர்ப்பவாதம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
மற்றபடி அண்ணாமலையின் கருத்தை 17 சதவிகிதம் பேர் தவறு என்றும், 12 சதவிகிதம் பேர் சரி என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், தனிச் சின்னம் விவகாரத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணையம், தி.மு.க கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவற்றுக்கு தனிச் சின்னம் ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அரசியல் கட்சிகள் கூறுவது குறித்து கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளப் பின்வரும் லின்கை க்ளிக் செய்யவும்…