மதுரை: திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள்: அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். மதுரை – அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் சேகரித்து மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா நேற்று ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: ‘மோடியா, லேடியா’ எனக் கேட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் சொன்னதை மறந்துவிட்டு தற்போது பாஜகவிடம் ஆதரவு கேட்டு கமலாலயம் வாசலில் நின்று கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக சின்னத்தை முடக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால் நீதிமன்றம் முன்னாள் முதல்வர் பழனிசாமி பக்கம் அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.
இது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கான தேர்தல். திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள். பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அவர்களை தயவு செய்து நம்பாதீர்கள். கருணாநிதியின் பிள்ளையும், பேரனும் உளறிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியை அளிப்பார்கள். தேர்தலுக்குப் பின் தகுதியை பார்த்து நம்மை நீக்குவார்கள்.
2019-ல் எம்பி தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டார்கள். அதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். தேர்லுக்கு முன் ஒரு பேச்சு பேசுவார்கள், தேர்தலுக்குப் பின் மற்றொன்றை பேசுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு பற்றி பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் தமது வீட்டைப் பற்றியே சிந்திப்பார்கள். கருணாநிதி, தன் மகன் ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னார். அதேபோல் ஸ்டாலினும் தனக்குப்பின்னால் தமது மகன் உதயநிதி வரமாட்டார் என்று சொன்னார். ஆனால் அவர்கள் சொன்னதை காப்பாற்றாதவர்கள்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். பாஜக, திமுக ஆகிய 2 பேரும் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆபத்தானவர்கள். அவர்கள் இந்த நாட்டுக்கு தேவையில்லை அதற்கு இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரியுங்கள். தேர்தலில் இரட்டை இலைச் சி்ன்னத்தை பார்த்து ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். வாரிசு கட்சி திமுகவுக்கும், வாயில் வடை சுடும் பாஜகவுக்கும், மூலப்பத்திரம் ஊழல் திமுகவுக்கும் தேர்தல் பத்திரம் ஊழல் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.