ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. அதன்படி, இதுவரை அறிவிக்காத 4 மக்களவை மற்றும் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது.
விஜயநகரம் மக்களவை தொகுதிக்கு கே. அப்பலநாயுடு, ஓங்கோல் தொகுதிக்கு ஸ்ரீநிவாசுலு ரெட்டி, அனந்தபுரம் தொகுதிக்கு அம்பிகா லட்சுமி நாராயணாவும், கடப்பாவுக்கு பூபேஷ் ரெட்டியின் பெயரையும் அறிவித்துள்ளது.
இதேபோன்று, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சீபுரபல்லி-கலா வெங்கட்ராவ், பீமலி-கண்டா நிவாச ராவ், பாடேரு-வெங்கட ரமேஷ் நாயுடு, தர்மா-கொட்டிபாட்டி லட்சுமி, ராஜம்பேட்டா-சுப்ரமணியம், ஆலுரு-வீரபத்ர கவுடு, குந்தக்கல்-கும்மனூரு ஜெயராம், அனந்தபுரம்-தக்குபாட்டி வெங்கடேஸ்வர பிரசாத், கதிரி-வெங்கட பிரசாத் என 9 சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியின் தோழமை கட்சிகளான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் அனகாபல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்கவில்லை. மற்ற 174 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதேபோன்று 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
ஆனால், காங்கிரஸ் தரப்பில் மட்டும் இதுவரை ஒரு வேட்பாளரின் பெயர் கூட அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸ் ஆந்திராவில் இம்முறை போட்டியிடா விட்டால், அது ஜெகன்மோகன் ரெட்டிக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும்.