புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மதுராவில் போட்டியிடும் பாஜக எம்பி நடிகை ஹேமமாலினியை காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர்சிங் (38) எதிர்கொள்கிறார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமாக கருதப்படும் மதுராவில், மக்களவைத் தேர்தல் போட்டியில் பொதுமக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு அங்கு காங்கிரஸ் சார்பில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டியிடுவதே காரணம்.
மதுராவில் முதல் பெண் எம்பியாக பாலிவுட் நடிகையான ஹேமமாலினி 2014 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 2019 மக்களவைத் தேர்தலிலும் நடிகை ஹேமமாலினியையே மதுராவாசிகள் தங்களது எம்பியாக்கினர். இந்த இரண்டு தேர்தல்களிலும் ஹேமமாலினியை உ.பி.யின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால், இந்தமுறை அக்கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராகி உள்ளது.
இந்தக் காரணத்தால் அதிக ஆதரவுபெற்ற பாஜக வேட்பாளர் என்று அழைக்கப்படுகிறார் ஹேமமாலினி. இருப்பினும், அங்கு காங்கிரஸ் தனது வேட்பாளராக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் பெயரை அறிவித்துள்ளது. இதனால், பாஜகவின் ஹேமமாலினிக்குக்கும், காங்கிரஸின் விஜயேந்தருக்கும் மதுராவில் நேரடிப் போட்டி உருவாகி விட்டது.
அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒலிம்பிக் நாயகனாக விஜயேந்தர், ஹரியாணாவின் பிவானியை சேர்ந்தவர். இவர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இணைந்தார். ஹரியாணாவை ஒட்டியுள்ள தலைநகரில் தென் டெல்லி தொகுதியில் மக்களவைக்காகப் போட்டியிட்டார்.
விஜயேந்தர் சார்ந்த ஜாட் சமூகத்தின் வாக்குகள், மதுராவில் கணிசமாக உள்ளன. இதன் காரணமாக விஜயேந்தர் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இங்கு வாக்குப் பதிவு இரண்டாம் கட்ட தேர்தலில் ஏப்ரல் 26-இல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாக உள்ளன.
உ.பி.யில் எதிர்கட்சிகளின் கூட்டணியான இண்டியா உறுப்பினர்கள் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றனர். இம்மாநிலத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி 63, காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.