புதுடெல்லி,
பிரதமர் மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாகவும், தாங்கள் விரும்பிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மக்களிடம் இருந்து பறித்து விட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஒருபுறம், நன்கொடை வர்த்தகம் செய்து வரும் பா.ஜ.க, நாட்டில் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு அரசை நடத்தி வருகிறது. மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, முதல்-மந்திரிகளை சிறையில் அடைத்து எதிர்க்கட்சிகளை நியாயமான முறையில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை’ என சாடியுள்ளார்.
மேலும் அவர், ‘பா.ஜ.கவுடன் யாரெல்லாம் இல்லையோ, அவர்களுக்கு சிறை. யாரெல்லாம் பா.ஜ.கவுக்கு நன்கொடை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஜாமீன். பிரதான எதிர்க்கட்சிக்கு நோட்டீசுகள். தேர்தல் பத்திரத்துக்காக மிரட்டல். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாட்டை ஒரு அரசு வழிநடத்துவதாக தெரியவில்லை. மாறாக குற்றவாளி கும்பல்தான் நடத்துவதாக தெரிகிறது’ என்றும் கூறியுள்ளார்.