இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், பணியாளர்கள் சிலர் சிறிய அறைகளை அமைத்து தங்கியிருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக அந்த அறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின்போது, தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கனமழை காரணமாக அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் ஹர்னாய் மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயுக்கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.