புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் கரௌலி தோல்பூர் (Karauli Dholpur) தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார் இந்து தேவி ஜாதவ். அவர் தேர்தல் அரசியலுக்கு புதியவர் என்றாலும், அந்தத் தொகுதியில் நம்பிக்கைக்குரிய சக்தியாக வலம் வருகிறார். இந்து தேவி கரௌலி தோல்பூரில் வெற்றி வேட்பாளாராக கால்பதிப்பாரா?
ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக இதுவரை 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில், ராஜஸ்தானின் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றி பெற்றது. மீண்டும் அதை தக்க வைத்துக்கொள்ள பாஜக பல அதிரடி தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
கரெளலி தோல்பூர் தொகுதியின் சிட்டிங் எம்பியான டாக்டர் மனோஜ் ரஜோரியாவுக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. காடிக் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் மனோஜ் ரஜோரியா இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
ஆனால், தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு சீட்டு கொடுக்காமல் பாஜக டீலில் விட்டுள்ளது. ஆனால் பாஜகவின் உயர்மட்ட தலைமை, தேர்தல் அரசியலுக்கு முற்றிலும் புதிதான இந்து தேவியை களமிறக்கி, ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இது அப்பகுதி மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதன்முறையாக, பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கரௌலி தோல்பூர் தொகுதியில் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால், இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் பஜன்லால் ஜாதவ் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இந்து தேவியின் அரசியல் களப் பிரவேசம் கரௌலி தோல்பூருக்கு புதிய வேகத்தைக் கொண்டுவருகிறது.
யார் இந்த இந்து தேவி? – 38 வயதான இந்து தேவி ஜாதவ், கரௌலி தோல்பூரில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படுகிறார். 2015 முதல் 2020 வரை கரௌலி பஞ்சாயத்து சமிதியின் (Panchayat Samiti) தலைவராக இருந்துள்ளார் இந்து தேவி. அப்போது அவர் ஆற்றிய பணிகள் அவரை வலுவான தலைவராக நிலைநிறுத்தியது.
பட்டப்படிப்பு முடித்திருக்கும் அவர், தனது சமூகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் இளம் தலைவராக வலம் வருகிறார். மேலும் கரௌலி பஞ்சாயத்து சமிதியின் தலைவராக இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள், அவருடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் பலராலும் பேசப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை அவர் கவர்ந்த விதம், அவரை தேசிய அரசியலுக்கு எடுத்து வந்துள்ளது. இத்தொகுதியில் வெற்றி வேட்பாளராக இந்து தேவி கால் பதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.