புதுடெல்லி: கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் அறிக்கையின் குழுவின் தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், ராஜிவ் சந்திரசேகர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அனில் ஆண்டனி உள்பட 24 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவதற்கான முயற்சியில் இக்குழு ஈடுபடும் என தகவல் வெளியாகி உள்ளது.