டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
‘சித்தி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதன் பிறகு, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 48. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவரது அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டேனியல் பாலாஜியின் மறைவு குறித்து அவரது இளைய சகோதரர் சாய் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நேற்று இரவு ஒரு 8 மணி அளவில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவராகவே நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆகியிருக்கிறார்.
அவருக்கு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் எல்லோரும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவச் சிகிச்சை பலனின்றி இரவு 9.54 மணியளவில் உயிரிழந்திருக்கிறார். தான் இறந்த பிறகு என்னுடைய கண்கள் பார்வையற்ற ஏழை மக்களுக்குப் பயன்பெறும் வகையில் அப்போதே அவர் கண்தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
அதனால் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மேல் அவரது உடல் ஓட்டேரி பகுதியில் இந்து முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்” என்று சாய் கண்ணன் கூறியிருக்கிறார்.