நடிகர் டேனியல் பாலாஜி நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
‘சித்தி’ தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, 2003-ம் ஆண்டு வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படம் மூலமாகத் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘வடசென்னை’, ‘பிகில்’ உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘வடசென்னை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இவரது ‘தம்பி’ என்னும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதாம்பாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. டேனியல் பாலாஜியின் உடலுக்கு விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வெற்றிமாறன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.