வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!
தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.