அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
குஜராத்தின் இந்த வெற்றிக்கு 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் அடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சாய் சுதர்சன் 40 – 50 ரன்களில் 2 முறை அவுட்டாகியுள்ளார். அதைப் பற்றி தொகுப்பாளர் கேட்டதற்கு சாய் சுதர்சன் நெகிழ்ச்சியான பதிலை கொடுத்தது பின்வருமாறு.
“என்னுடைய பங்கு அணியின் வெற்றிக்கு உதவியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே ஸ்பின்னர்களை குறி வைத்து அடித்து அழுத்தத்தை குறைக்க முயற்சித்தோம். மோகித் சர்மா மற்றும் ரஷித் கான் ஆகியோர் வெற்றியில் மகத்தான பங்காற்றினர்.
எங்களுடைய சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் அனைவரும் அதிக ரன்கள் அடிக்க விரும்புவார்கள். ஆனால் நான் என்னுடைய அணி வெற்றி பெறுவதற்கு பங்காற்றுவதைப் பற்றி மட்டுமே நினைக்கிறேன். அதைச் செய்தால் சாதனைகள் தாமாக வரும்” என்று கூறினார்.