மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோச் பிஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹட்டாவில் பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இங்கு பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் போட்டியிடுகிறார். இவரது கூட்டத்தில் அங்குள்ள முஸ்லிம்களும் திரளாக கலந்து கொண்டனர். இதில், உற்சாகம் அடைந்த அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘அல்லாஹு அக்பர்’ எனும் ஆன்மிக முழக்கம் எழுப்பினர்.
இந்துத்துவா கட்சியாகக் கருதப்படும் பாஜகவின் கூட்டத்தில் இந்த முழக்கம் அப்பகுதியினரை மிகவும் கவர்ந்தது. ராஜ்பன்ஷி எனும் பிரிவை சேர்ந்த இந்த முஸ்லிம்கள், இதற்கு முன் சிலிகுரியில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்திலும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பாஜகவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் கிடைத்த ஆதரவால் அவர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதிகளில் பாஜக கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்து கோச் பிஹார் மாவட்ட பாஜக தலைவரும் எம்எல்ஏவுமான சுகுமார் ராய் கூறும்போது, “இக்கூட்டத்தில் எழுந்த ’அல்லாஹு அக்பர்’ முழக்கத்தை நாங்கள் பாஜகவுக்கு ஆதரவானதாகக் கருதுகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற எங்கள் கூட்டத்தில் பர்தா அணிந்து வந்த திரளான முஸ்லிம் பெண்கள், ‘பாரத மாதா கீ ஜெய்’ என முழக்கமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை காட்டினர்.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம் களை வாக்கு வங்கியாக மட்டுமே திரிணமூல் கட்சி பயன்படுத்துகிறது. இதனால், இம்மாநில முஸ்லிம்களின் பார்வை மாறி, அது பிரதமர் மோடிக்கு ஆதரவாகத் திரும்பி வருகிறது” என்றார்.
இந்த பிரச்சாரக் கூட்டமானது, கோச் பிஹார் மாவட்டத்தின் தின்ஹட்டா, சிதாய் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளில் அதிகமாக வாழும் முஸ்லிம்களின் ஆதரவுடன் நடைபெற்றது. அடுத்து, கோச் பிஹார் நகரில் மாவட்ட அளவிலான ஒரு கூட்டத்தை பாஜக நடத்த உள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 18, திரிணமூல் கட்சி 22, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றன.