சிவகாசி: “நடிகர்கள் என்ற முறையில் என்னையும் சரத்குமாரையும் பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என சிவகாசியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ராதிகா பேசினார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, அவரது கணவர் சரத்குமார் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் ராதிகா பேசியது: “அரசியல் எனக்கு புதிதல்ல. நான் பல ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறேன். ஆனால் நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை மோடி வழங்கியுள்ளார். இந்தியா முழுவதும் மோடி ஜி எனவும், பாரத்மாதாகி ஜே என்றும் ஒலிக்கும் போது, தமிழகத்தில் மட்டும் தான் கடிவாளம் போட்டது போல மதவாதிகள் என்கின்றனர். ஜிஎஸ்டி, குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
‘தோனி சிக்ஸர் அடிப்பது போல்’ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்து வருவதால் அனைவருக்கும் பயம் வந்து விட்டது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மனதில் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். எதிரிகளை குறைவாக எடை போடக்கூடாது. நடிகர்கள் என்ற முறையில் என்னையும், சரத்குமாரையும் மக்கள் பார்க்க வருவார்கள். அவர்களை ஓட்டுக்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, எதிரிகளை பயப்பட செய்ய வேண்டும். மோடி குறித்து யாரும் தவறாக பேசினால் சும்மா விடக்கூடாது. தேர்தல் பிரசாரத்தில் எந்த ஊரையும் நான் விடமாட்டேன். ஒவ்வொரு ஓட்டுக்காகவும் இறங்கி சேகரிப்பேன். நீங்கள் அனைவரும் எனக்கு சகோதரர்களாக இருந்து, என் வெற்றிக்காக பாடுபட வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி ஆகியவற்றை ராதிகா சரத்குமாருக்கு, தொண்டர்கள் பரிசாக அளித்தனர். இதில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, அமமுக மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ், தாமக மாவட்ட தலைவர் ராஜபாண்டி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.