`என்னை மன்னித்து விடுங்கள்' – பெற்றோருக்கு மெசேஜ்; பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவி தற்கொலை!

ஆந்திராவில் 17 வயது மாணவி, தன்னை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்து மிரட்டுவதாகக் குற்றம்சாட்டி, பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட மாணவி விசாகப்பட்டினத்தில் பாலிடெக்னிக் கல்லூரியொன்றின் விடுதியில் தங்கிப் படித்து வந்திருக்கிறார்.

தற்கொலை

இந்த நிலையில், அனகாபல்லி மாவட்டத்தில் வசிக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாகத் தரப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், மாணவியைக் காணவில்லை என போன் வந்திருக்கிறது. அதையடுத்து, குடும்பத்தினரும் மாணவிக்கு போன் செய்தும் எதிர்முனையிலிருந்து பதில் எதுவும் வராததால், உடனடியாகப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். நள்ளிரவு 12:50 மணியளவில் மாணவியிடம் குடும்பத்தினருக்கு மெசேஜ் ஒன்று வந்தது.

அந்த மெசேஜில் மாணவி, `டென்ஷன் ஆகாமல், நான் கூறுவதைக் கேளுங்கள். நான் ஏன் செல்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. தயவு செய்து என்னை மறந்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள். அம்மா, அப்பா… நீங்கள் என்னைப் பெற்றெடுத்து வளர்த்ததற்கு நன்றி. என் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுவிட்டு தன்னுடைய தங்கையிடம், “உன்னுடைய எதிர்காலம் பற்றிய விஷயத்தில் கவனம் செலுத்து. பிடித்ததையெல்லாம் படி. என்னைப் போல் வழிதவறி, பிறரால் பாதிக்கப்படாதே. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு” என்று தெரிவித்திருந்தார்.

பாலியல் துன்புறுத்தல்

பின்னர் தந்தைக்குத் தனியாக ஒரு மெசேஜில், கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால்தான் இந்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த மாணவி, “ஆசிரியர்களிடம் ஏன் புகார் செய்யவில்லை என்று என்னை நீங்கள் கேட்கலாம். ஆனால், அது எதற்கும் உதவாது. என்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள், என்னைப் புகைப்படங்களை எடுத்துவைத்து மிரட்டுகிறார்கள். மற்ற பெண்களும் இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எங்களால், யாரிடமும் சொல்ல முடியவில்லை. அதேசமயம், கல்லூரிக்கு வருவதையும் எங்களால் தவிர்க்க முடியவில்லை. இதுபற்றி, காவல்துறையில் நான் புகாரளித்தாலோ அல்லது அதிகாரிகளை அணுகினாலோ எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிடுவார்கள். நான் இந்த முடிவை எடுப்பதற்குக் காரணம், நான் இப்போது போய்விட்டால், சில வருடங்களுக்கு நீங்கள் சோகமாக இருப்பீர்கள். பின்னர், தானாகவே மறந்துவிடுவீர்கள். ஆனால், நான் அருகிலிருந்தால், என்னைப் பார்க்கும்போதெல்லாம் மோசமாக உணர்வீர்கள்” என்று தெரிவித்தார்.

இறுதியாக, தன் அக்காவிடம் மெசேஜில், “என்னை மன்னித்துவிடுங்கள் அக்கா. உங்களையெல்லாம் நான் டென்ஷனாக்கிவிட்டேன். இருந்தாலும், நான் போக வேண்டும்” என்று கூறினார். இந்த மெசேஜ்கள் வந்த உடனேயே, “அவசரப்பட்டு வேறெந்த முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். போலீஸார் வந்துகொண்டிருக்கிறார்கள்” என மாணவிக்கு பெற்றோர் மெசேஜ் செய்தனர். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. அடித்த கொஞ்ச நேரத்தில், கல்லூரியில் மனைவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தற்கொலை

பின்னர், இது குறித்து போலீஸிடம் புகாரளித்த மாணவியின் தந்தை, “என் மகள் எதற்காக இறந்தார் என்று எனக்குத் தெரிய வேண்டும். மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் அவரை நான் வளர்த்தேன். 10-ம் வகுப்புத் தேர்வில் அவர் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அதனால், அவர் நன்றாகப் படிக்க வேண்டும் என்று இந்த கல்லூரியில் நம்பி சேர்த்தோம்” என்று தெரிவித்தார். இருப்பினும் கல்லூரி முதல்வர், “நாங்கள் அனைத்து மாணவர்களையும் கவனித்து வருகிறோம். பெண்கள் விடுதிக்குள் ஆண்கள் செல்ல முடியாது. பெண்கள் வார்டன்கள் இருக்கின்றனர். எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு வாய்ப்பேயில்லை” என மாணவியின் குற்றச்சாட்டை மறுத்துவிட்டார். அதையடுத்து போலீஸ் அதிகாரியொருவர், ஆசிரியர்கள் உட்பட பிற மாணவர்களிடம் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.