`கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான வழியே பணமதிப்பிழப்பு..!' – உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க, 2014-ல் ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் பிரதமர் மோடியால் ஒரே இரவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால், பாமர மக்கள் அனைவரும் ஏ.டி.எம் வாசல்களில் கால்நோக நின்றதை யாரும் மறந்திருக்கவும் மாட்டார்கள். யாரும் அதை மறுக்கவும் மாட்டார்கள். கறுப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது அறிவித்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பா.ஜ.க கூறினாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

பணமதிப்பிழப்பு (demonetization) நடவடிக்கை – மோடி

இருப்பினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் 4:1 தீர்ப்பின் அடிப்படையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே என்றே தீர்ப்பளித்தது. இதில், `பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது’ எனத் தீர்க்கமாகத் தீர்ப்பளித்த அந்த ஒற்றை நீதிபதி பி.வி.நாகரத்னா. இவரே, பில்கிஸ் பானு வழக்கில் குஜராத்தின் பா.ஜ.க அரசால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்பியவர்.

இந்த நிலையில், `கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான நல்ல வழிதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருக்கிறார்.

ஹைதராபாத்திலுள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று ‘நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றிய நீதிபதி பி.வி.நாகரத்னா, “அப்போது 86 சதவிகித ரூபாய் நோட்டுகள் 500, 1,000 நோட்டுகளாக இருந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த 86 சதவிகித ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

அந்த நாள்களில் வேலைக்குச் சென்ற ஒரு தொழிலாளி, அன்றாட அத்தியாவசியப் பொருள்களை வாங்க மளிகைக் கடைக்குச் செல்வதற்கு முன், தனது நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவதிப்பட்டதை நினைத்துப் பாருங்கள். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 98 சதவிகித ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது. அப்படியானால், கறுப்பு பணத்தை ஒழிக்க இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்பட்டது என்று எப்படி கூற முடியும். அப்போதுதான் தெரிந்தது, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான நல்ல வழிதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, வருமான வரி நடவடிக்கைகள் என்ன ஆனது என்பதும் எங்களுக்குத் தெரியாது. இதனால், சாமானியனுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையே என்னைக் கிளர்ந்தெழச் செய்தது” என்று கூறினார்.

மேலும், சமீபகால ஆளுநர் செயல்பாடுகள் குறித்து பேசிய நீதிபதி பி.வி.நாகரத்னா, “சமீப காலத்தில் மாநில ஆளுநர்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலிருப்பது மற்றும் தங்களின் பிற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்ற வழக்குகளில் வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்று நான் கருதுகிறேன். ஆளுநர் பதவி என்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு பதவி.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

இதைத்தான் செய்யவேண்டும் அல்லது செய்யக் கூடாது என ஆளுநர்கள் கூறுவது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமைகளை செய்தால், நீதிமன்றங்களில் இது போன்ற வழக்குகள் குறையும். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமைகளை செய்யவேண்டும் என்று இப்போது சொல்லப்படும் நேரம் வந்துவிட்டது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.