விருதுநகர்: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் விருதுநகர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்காக கொடுத்துள்ளன. பாஜகவும் சமகவிலிருந்து வந்த நடிகை ராதிகாவை களமிறக்கியுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் கடும் போட்டியில் வேட்பாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளில் விருதுநகர், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை திமுகவும், சாத்தூரை மதிமுகவும், சிவகாசியை காங்கிரஸ் கட்சியும், திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.
திருப்பங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 3,23,160 வாக்காளர்களும், திருமங்கலம் தொகுதியில் 2,77,311 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2,29,837 வாக்காளர்களும், சிவகாசி தொகுதியில் 2,30,997 வாக்காளர்களும், விருதுநகர் தொகுதியில் 2,15,529 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை தொகுதியில் 2,14,861 வாக்காளர்களும் என மொத்தம் 14,91,695 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் கண்டன. அப்போது, அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனும், திமுக வேட்பாளர் மதுரையைச் சேர்ந்த ரத்தினவேலுவும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். ஆனால், கடந்த 2019 தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணி வேட்பாளர் மாணிக்கம்தாகூர், அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில், தேமுதிக வேட்பாளர் சுமார் 3.50 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் அவரைவிட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.
கடந்த முறை போன்றே இந்த முறையும் பிரதான கட்சிகள் நேரடியாக களம் காணாமல் கூட்டணிக் கட்சிகளை களம் இறக்கியுள்ளன. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பாஜக நடிகை ராதிகாவை களம் இறங்கி போட்டியை மேலும் வலுவாக்கியுள்ளது. பாஜக வேட்பாளர் நடிகா ராதிகா தாமரை சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர் சமகவிலிருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், பிராதன கட்சி வேட்பாளர்கள் மூவரும் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் கட்சி அலுவலகங்களைத் திறந்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக வேட்பாளர் சமுதாயத் தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து வாக்கு சேகரிப்பதோடு மக்களை சந்தித்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.