கடந்த மாதம் கொங்கு மண்டலத்தில் விசிட் அடித்த பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். 19.03.2024 அன்று சேலத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் படுவேகமாக தொடங்கிவிட்டது. தி.மு.க- காங்கிரஸின் `இந்தியா’ கூட்டணியின் எண்ணம் என்னவென்று தெரிந்துவிட்டது.
இந்து மதத்தின்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நாம். ஆனால், அந்த நம்பிக்கையை அழிக்கும்விதமாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொட்டை எழுத்தில் ஓம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அன்னை மாரியம்மனை சக்தியின் வடிவமாக வழிப்படுகிறோம். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன் என அனைத்திலும் பெண் சக்தி தெய்வங்கள் இருக்கின்றன.
சனாதன தர்மம் எனச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க – காங்கிரஸ், இந்த சக்திகளை அழிக்கமுடியுமா… அவர்கள்தான் அழிந்து போவார்கள். ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முதற்கட்டத்தில்தான் இவர்களது அழிவு ஆரம்பமாகப் போகிறது. அது இந்த கோட்டை மாரியம்மனுக்கே தெரியும்” என்றார்.
கோட்டை மாரியம்மன் பெண் தெய்வத்தை முன்னிலைப்படுத்தி பிரதமர் பேசியது, சேலம் வட்டத்தில் பெரிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் நேற்று காலை சேலத்தில் தங்கியிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், திடீரென சேலம் டவுன் பஜார் பகுதியில் நடந்து சென்று, அங்கு பொதுமக்களையும், வியாபாரிகளையும் சந்தித்து, தி.மு.க வேட்பாளரான செல்வகணபதிக்கு வாக்கு கேட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே அதே டவுன் பகுதியில் உள்ள முக்கிய கோயில்களான கோட்டை மாரியம்மன் கோயில், சுகனேஷ்வரர் கோயிலுக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஒருபக்கம் தரிசனத்திற்கு சென்று வந்தார். அவருடன் வீரபாண்டி செழியன் மகள் மற்றும் உமாராணி ஆகியோர் வருகை புரிந்தனர். முதலில் சுகனேஸ்வரர் கோயில் 15 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார். அதேபோல கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினுக்கு, கோயில் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் கோயிலின் பிரகாரத்தினை சுற்றி வந்து, அங்கிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றையும் தொட்டு வழிபட்டுச் சென்றார். இறுதியாக வெளியேறும்போது கோயிலுக்காக தான் கொண்டுவந்த பணத்தை, உண்டியலில் செலுத்தினார். இதனைப் பார்த்த பக்தர்கள், அவருடன் சேர்ந்து சாமி தரிசனத்தில் ஈடுபட்டதுடன் போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர்.