புதுடெல்லி: கேஜ்ரிவால் ஒரு சிங்கம். சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் பேசியுள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் பேசிய கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். கேஜ்ரிவால் ஓர் உண்மையான தேசபக்தர். அவர் நேர்மையானவர். ஆனால் பாஜகவினர் கேஜ்ரிவால் சிறையில் இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
கேஜ்ரிவால் ஒரு சிங்கம். அந்தச் சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது. இந்தத் தருணத்தில் நான் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” எனக் கூறி அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.
புதிய இந்தியாவை உருவாக்குவோம்.. கேஜ்ரிவால் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், “நாங்கள் உங்களிடம் இன்று வாக்கு கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்குமாறு கேட்கிறேன். இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகப்பெரிய தேசம். இந்தச் சிறையினுள் இருந்துகொண்டு நான் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.