புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்யும் தருணம் இது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நடந்த கண்டனப் பேரணி பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்யும் தருணம் இது.
நாம் அனைவரும் இன்று இங்கு நாட்டைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற மற்றும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளோம். ஆகையால் நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம். நமக்குள் நாம் போட்டியிட்டு,சண்டை போட்டால் வெற்றி பெற இயலாது.
பிரதமர் மோடி அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சியினரை மிரட்டவும், அதன் தலைவர்களை அச்சுறுத்தவும், எதிர்க்கட்சி ஆட்சிகளைக் கவிழ்க்கவும் அரசு அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்கிறார்.” என்றார்.
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் பேசுகையில், “மோடி அரசுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் முன்னேற்றம் பிடிக்கவில்லை. ஹேமந்த் சோரனின் கைதுக்கான காரணம் எந்த ஆவணத்திலும் தெளிவாக இல்லை. ஜார்க்கண்டில் பாஜக சித்தாந்தம் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்” என்றார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், “நீங்கள் கேஜ்ரிவாலை வேண்டுமானால் கைது செய்யலாம். ஆனால் அவரது கொள்கையை எப்படிக் கைது செய்வீர்கள். இந்தியா முழுவதும் அந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு உருவான கேஜ்ரிவால்கள் அனைவரையும் நீங்கள் எந்தச் சிறையில் அடைப்பீர்கள். அரவிந்த் கேஜ்ரிவால் என்ற பெயரே ஒரு கொள்கையின் பெயர் தான். இன்று இண்டியா கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. பாஜகவுக்கு இந்த ஒற்றுமை பொறுக்கவில்லை” என்றார்.
400+ சாத்தியமில்லை: முன்னதாக ராகுல் காந்தி பேசுகையில், “பாஜக இத்தேர்தலில் 400 எம்.பி.,க்களுடன் நாடாளுமன்றத்தில் அமர்வோம் என்று முழங்குகிறது. இந்த முழக்கம் மேட்ச் ஃபிக்ஸிங் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சமூக வலைதளம், மேட்ச் ஃபிக்ஸிங், ஊடகத்தின் மீதான அழுத்தம் ஆகியன இல்லாமல் பாஜகவால் 180 சீட்கள் கூட பெறமுடியாது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் அம்பயர்களுக்கு அழுத்தம் ஏற்படும்போது விளையாட்டு வீரர்கள் விலைபோகின்றனர். கேப்டன்கள் மிரட்டப்படுகிறார்கள். நம் முன்னால் இப்போது மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் அம்பயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்கிறார். நம் அணியின் இரண்டு வீரர்களை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ஆனால் எங்களின் அனைத்து கணக்குகளும் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் முடக்கியுள்ளனர். இது எந்த மாதிரியான தேர்தல் எனத் தெரியவில்லை.பிரதமர் மோடி இந்த நாட்டின் சில தொழிலதிபர்களுக்காக தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசமைப்பை ஏழைகளிடமிருந்து பறிக்கிறார்.
இந்தத் தேர்தல் சாதாரணமானது அல்ல. இது தேசத்தை, அரசமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இதில் நீங்கள் முழு சக்தியுடன் வாக்களிக்காவிட்டால், அவர்களின் மேட்ச் ஃபிக்ஸிங் வென்றுவிடும். அது வெற்றி பெற்றுவிட்டால் அரசமைப்பு சிதைக்கப்படும். அது நடக்கும் நாள் தான் நம் நாடும் முடிவைக் காணும் நாள். பாஜக எம்.பி. ஒருவர் எங்களுக்கு 400 எம்.பி.க்கள் கிடைக்கும் நாளில் அரசமைப்பு மாற்றப்படும் என்றார். அவர் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு கருத்தை திணிப்பதற்கு முந்தைய வெள்ளோட்டம்.” எனக் கூறியிருந்தார்.