Jio AirFiber 50 Days Free Offer: தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பரந்த அளவில் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 5ஜி இணைய சேவையை ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் மட்டும்தான் வழங்கி வருகின்றன. இதில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தனது போட்டியாளர்களை எதிர்கொள்ள பல தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, மொபைல்களுக்கான பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் மட்டுமின்றி, வயர்லெஸ் இணைய சேவையை வழங்கும் ஜியோ ஏர்ஃபைபரிலும் (Jio AirFiber) பல சலுகளை வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜியோ ஏர்ஃபைபரில் தற்போது 50 நாள்கள் இலவச ஆப்பர் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள இந்த சீசனில் 50 நாள்கள் இலவச சேவையை ஜியோ ஏர்ஃபைபரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகையை பெறுவது எப்படி?
ஜியோ ஏர்ஃபைபர் என்பது வயர்லெஸ் இணைய சேவையாகும். இது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது முக்கிய நகரங்களில் மட்டுமில்லாமல் பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 5352 நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 5ஜி இணைய சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகிறது. ஜியோ ஏர்ஃபைபரை இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசெல்லும் பொருட்டு இந்த 50 நாள் இலவச சேவையை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை பெறும் வழிமுறைகள் குறித்தும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த ஆப்பர் Jio True5G வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, நீங்கள் இந்த ஆப்பரை பெற 5ஜி சாதனத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி இந்த ஆப்பரை பெற வாடிக்கையாளர்கள் ஜியோவின் True 5G சேவையை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த மொபைல் நம்பரை பயன்படுத்தி, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை பெறுபவர்களுக்கே இந்த 50 நாள் இலவச சலுகை வழங்கப்படுகிறது.
எப்போது வரை இருக்கும் இந்த திட்டம்?
மேலும், வாடிக்கையாளர்கள் ரூ. 599 ரீசார்ஜ் திட்டங்கள் அல்லது 6 முதல் 12 மாதங்களுக்கு முன்பணம் செலுத்தப்படும் ஓடிடி திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த 50 நாள் இலவச தள்ளுபடி கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் தங்களின் MyJio கணக்கில் AirFiber பெற செயல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சலுகையின் கீழ் தள்ளுபடி Voucher வரவு வைக்கப்படும். இந்த 50 நாள் இலவச தள்ளுபடி என்பது கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் சலுகை என்பதால், ஜியோ நிறுவனம் எந்த நேரத்திலும் இந்த ஆப்பரை நிறுத்த வாய்ப்புள்ளது. எனவே, இந்த 50 நாள் இலவச ஆப்பரை பெற இப்போதே அதைப் பெறுவது நல்லது.
மேலும், இந்த தள்ளுபடியின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் செயல்படுத்துவதற்கான கடைசி தேதி ஆக ஏப்ரல் 30ஆம் தேதி என ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு நம்பருக்கு அதாவது ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் தள்ளுபடி வவுச்சரை வேறொரு நபருக்கு மாற்ற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும். இதன் மூலம், ஜியோ ஏர்ஃபைபர் சேவைகளை 50 நாட்கள் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். வீட்டில் வைஃபை பொருத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். குறிப்பாக, ஜியோ சினிமாவில் ஐபிஎல் பார்க்க விரும்புவோரும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.