புதுடெல்லி,
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரிலான இசை அரங்கிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 144 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேர் உள்பட சந்தேகத்திற்குரிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தீங்கு தரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன், இருதரப்பாகவும் மற்றும் பலதரப்பாகவும் இணைந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ரஷியா போராடும் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், மாஸ்கோ அருகே கடந்த வாரம் நடந்த மிக பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தும் தூதரகத்திற்கு தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று சமீபத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் ரஷிய அரசுக்கான உணர்வுகளை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் பிற நாடுகளின் மக்களுக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்து வடிவிலான பயங்கரவாதங்களையும் நிராகரித்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர்கள், ரஷியாவுக்கான வலுவான ஆதரவை வழங்கினர் என்றும் தெரிவித்து உள்ளார்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், கடந்த 22-ந்தேதி இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது. வெடிகுண்டையும் வீசியது.
இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.
ஞாயிற்றுக்கிழமை (24-ந்தேதி) ஒரு நாள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதின் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றினார். அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் ஒரு நாள் முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன.