புதுச்சேரி: “பிரதமர் மோடி திமுகவினருக்கும், முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டது என்று சொல்கிறார். பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” என்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் வில்லியனூர், மரப்பாலம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லியனூர், மரப்பாலம் பகுதிகளில் அவர் பேசியதாவது: “கடந்த மக்களவை தேர்தலில் வைத்திலிங்கத்தை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
கடந்தமுறை நம்முடைய எதிகள் ஒரே அணியாக வந்தார்கள். இந்தமுறை பிரிந்து அணிகளாக வருகின்றனர். எனவே இந்தமுறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். வாக்கு இயந்திரத்தில் நீங்கள் வைக்கும் ஓட்டு தான் நரேந்திரமோடிக்கு நாம் வைக்கும் வேட்டு. புதுச்சேரி மாநிலத்துக்கு தனிமாநில அஸ்தஸ்து வழங்கப்படும்.
மின்சாரம் தனியார் மயமாக்கப்படமாட்டாது. ரேஷன் கடைகள் திறக்கப்படும். புதுச்சேரி கடன் தள்ளுபடி செய்யப்படும். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்டவைகளை முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்று தவழ்ந்து சென்று யாருடைய காலையும் பிடித்து முதல்வராகவில்லை. அப்போது கரோனா பெருந்தொற்று காலம். கடும் நிதி நெருக்கடி. அதிமுக பெரும் கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
ஆட்சி பொறுப்பேற்ற ஒரே நாளில் 5 கையெழுத்துக்களை முதல்வர் போட்டார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் கெண்டு வந்தார். இதனால், மாதம் ரூ.900 சேமிக்கின்றனர். இதுவரை 460 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதுதான் அந்த திட்டத்தின் வெற்றி.
விடியல் பயண திட்டம் மூலம் பெண் பிள்ளைககள் கல்லூரி சென்று படித்தால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உரிமைத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 2 ஆண்டுகளில் 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று ஆண்களுக்கும் அந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். அதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
பள்ளிகளில் முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிரின் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நல்லத்திட்டங்கள் புதுச்சேரிக்கும் வர வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் வைத்திலிங்கத்துக்கு வாக்களித்து மீண்டும் நாடாளுமன்றத்துககு அனுப்ப வேண்டும். திமுக ஊழல் செய்கிறது என்று பிரதமர் கூறுகிறார். மத்திய தணிக்கை குழு 6 மாதத்துக்கு முன்பு கொடுத்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. அந்த பணம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை.
1 கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு செய்துள்ளனர். இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கி முறைகேடு செய்துள்ளனர். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டும். தமிழகம், புதுச்சேரி மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றால் வைத்திலிங்கத்தை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 16 தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளேன். நிச்சியமாக சொல்கிறேன் தமிழகத்தில் 39 தொகுதி, புதுச்சேரி ஒன்று என 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்ந்தெடுப்போம். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் தான் நம்முடைய நாட்டுக்கு ஒரு விடியலை தருவார். மத்தியில் நரேந்திரமோடி 10 ஆண்டுகளாக ஆட்சி புரிகிறார். எப்போதாவது புதுச்சேரி வந்துள்ளாரா? தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். புயல், வெள்ளம் என்று வேறு எதற்கும் அவர் வரமாட்டார். 2019-ம் ஆண்டு மதுரைக்கு வந்திருந்தார்.
மத்திய நிதியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்போவதாக வாக்குறுதி அளித்தார். இப்போது வரை ரூ.1 கூட ஒதுக்கவில்லை. அங்கு வைத்தது ஒரே ஒரு செங்கல்தான். அந்த கல் 5 ஆண்டுகளாக என்னிடம் தான் இருக்கிறது. பிரதமர் மோடி ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால் 15 பைசா போட்டாரா?
பிரதமர் மோடி திமுகவினருக்கும், முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டது என்று சொல்கிறார். பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம். தூங்காமல் தேர்தல் பணியை செய்யவுள்ளோம். மோடியின் ஆட்சியில் வாழ்ந்தது அதானி மட்டும் தான். ஆகாய வளர்ச்சியைவிட மிகப்பெரிய வளர்ச்சி. முன்னாள் முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் தோல்வியடைந்தார்.
பாஜகவில் தோற்றால் எங்காவாது ஆளுநராக அனுப்பிவிடுவார்கள்.அடுத்த பலியாடு ரெடியாகியுள்ளது. தமிழிசை இங்கு ராஜினாமா செய்து தென்சென்னைக்கு அனுப்பியுள்ளனர். அவர் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா? ஆடு தானா சென்று தலையை நீட்டுவது போன்று, தமிழிசை இம்முறை தென்சென்னையில் நிற்கிறார். புதுச்சேரி மாநில உரிமை அனைத்தையும் மத்திய அரசு பறித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கையை அனுமதிக்கவில்லை. ஆனால் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரியில் கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு. ஆனால் புதுச்சேரியில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. எனவே இது போன்ற தேர்வுகளை ஒழிக்கவும், மாநில உரிமையை மீட்க வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று அவர் பேசினார். முன்னதாக அவர் பேசும்போது, சுவர் இடிந்து மரணமடைந்த 5 பேருக்கு இரங்கல் தெரிவித்தார்.