புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலத்தில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது மின்துறை அலுவலக சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இப்பணியில் அரியலூர் மாவட்டம் நெட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 16 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்துறை அலுவலக சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் சற்று தள்ளியிருந்ததால் தப்பித்தனர்.
இது குறித்து புதுச்சேரி தீயணைப்பு துறை மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.