கேரள பாஜக தலைவரான சுரேந்திரன், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை எதிர்த்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தன் மீதுள்ள வழக்குகள் விவரம் குறித்து, கட்சி இதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அது 3 பக்க அளவுக்கு நீண்டு இருக்கிறது.
அவர் மீது மொத்தம் 242 வழக்குகள் உள்ளன. இதில் 237 வழக்குகள் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சபரிமலை போராட்டம் தொடர்புடையவை. சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்ததற்கு எதிராக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தின.
அப்போது இந்த வழக்குகள் சுரேந்திரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இது குறித்து எக்ஸ் தளத்தில் பாஜக தேசிய செயலாளர் சந்தோஷ், ‘‘நாட்டின் சில பகுதிகளில் தேசியவாதியாக இருப்பது மிகவும் சிரமம். இது அன்றாட போராட்டம். ஆனால் போராட தகுதியான சம்பவங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.