மலையாள திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்).
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளை எடுக்க நடிகர் பிருத்விராஜ், தனது உடல் எடையைக் குறைத்து எழும்பும் தோலுமாக நடித்திருப்பார். அவரின் இந்த அர்பணிப்பு வியக்க வைத்திருந்தது.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் உடல் எடையைக் குறைத்தது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இது பற்றிப் பேசிய பிருத்விராஜ், “உடல் எடைக் குறைத்து இக்கதாப்பத்திரத்தில் நடிப்பதற்காக நான் 72 மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் இருந்தேன்.
இது சரியான முறையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த சமயத்தில் உடனே உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நான் அதைச் செய்தேன். படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வரும் இது. ஆனால், மூன்று ஆண்டுகளாக பாலைவனத்தில் இருந்த அக்கதாப்பத்திரத்தின் கஷ்டங்களை உணர வைக்க வேண்டும் என்பதற்காகச் செய்தேன்.

இதுபோன்று உடல் எடைகுறைத்து ஒரு நடிகர் உழைத்தால் அதை ஆவணப்படமாக எடுத்து விளம்பரப்படுத்த நினைப்பார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை, அது சரியானதுமில்லை. பார்ப்பவர்கள் இதைத் தவறான உதாரணமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடல் எடையைக் குறைக்க மருத்துவர்களின் அலோசனைகள் மிகவும் அவசியமானது” என்று பேசியிருக்கிறார்.