ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனத்தின் AI-331 விமானம், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, மாலை 5 மணிக்கு பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 280-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாமல், மறுநாள் மாலை 8 மணிக்குப் புறப்பட்டு இரவு 11 மணிக்குத்தான் டெல்லியில் தரையிறங்கியது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமான ஓட்டுநர்களுக்கு நடத்தப்பட்ட ஆல்கஹால் சோதனையில் அவர்கள் தோல்வியடைந்ததால், வேறு விமானிகளை பணியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்குக் காரணமாச் சொல்லப்பட்டது.
அதேசமயம், இந்த தாமதம் குறித்து விமான நிறுவனம், பயணிகளுக்கு முன்கூட்டியே எதுவும் அறிவிக்கவுமில்லை, பயணிகளுக்கு உணவு ஏற்பாடும் செய்யவில்லை. இதன் காரணமாக, `இரவு முழுவதும் காத்திருப்பு அறை பென்ச்சிலேயே (Bench) உறங்கினோம், காலை 5 மணியளவில்தான் தங்குவதற்காக ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்’ எனப் பயணிகள் ஏர் இந்தியா நிறுவனம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அந்த பயணிகளில் ஒருவரான தனியார் நிறுவனத்தின் ஊழியர் மோகித் நிகாம் (33), `விமானம் புறப்பட 24 மணி நேரம் தாமதமானதால் 12-11-2018 அன்று திட்டமிட்டிருந்த பணிகள் எதுவும் செய்ய இயலாததால், பணிஇழப்பு ஏற்பட்டது. இதனால், மனதளவில் வேதனை அடைந்தேன்’ கூறி மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில், பணி இழப்புக்கான இழப்பீட்டு தொகையையும், பயணச்சீட்டு தொகையையும் திருப்பியளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவோடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விமானம் தாமதமானதற்கான காரணத்தையும் கோரி, அந்த தகவல்களையும் மனுவுடன் இணைத்திருந்தார். அந்தத் தகவலில், விமானம் புறப்படுவதற்கு முன் செய்ய வேண்டிய கட்டாய சோதனைகளைப் பின்பற்றாததுதான் விமானம் தாமதமானதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டிருந்தது.
பின்னர், இதில் விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம், `விமான நிறுவனத்தின் மீதுதான் தவறு இருக்கிறது. விமானம் தாமதமானதால் அவரது பணியில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அவர் இழப்பீடு கோருவது நியாயம்தான். அதேசமயம், பயணச்சீட்டுக்கான தொகையைத் திரும்பக் கேட்பது நியாயமற்றது. ஏனெனில் அவர் புதிய பயணச்சீட்டை பதிவுசெய்து வரவில்லை. விமான நிறுவனம் ஏற்பாடு செய்த வேறொரு விமானத்தில் அதே பயணச்சீட்டை வைத்தே பயணம் செய்திருக்கிறார். மேலும், பயணிகள் தங்குவதற்காக ஹோட்டல் அறையும் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. எனவே, அவரின் பணி இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.85,000 அவருக்கு வழங்க வேண்டும்’ என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.